20130513

உலகக் கவிதை - 1

சிறு வயதிலிருந்தே சிறந்த கவிதைகளும் அவற்றை உருவாக்கும் கவிஞர்களின் உள்ளங்களும் எனக்கு மிகுந்த ஆச்சரியங்களாகத்தான் இருந்திருக்கின்றன. ஒரு கவிதை படிக்கும்போது அக்கவிதைக்கு பின்னால் செயல்பட்ட கவிமனம் என்னவென்றும் எப்படிப்பட்டதென்றும் ஆழ்ந்து யோசிப்பது எனது இயல்பு. (இசையிலுமே அவ்வண்ணம் தான்). கடந்த பல ஆண்டுகளாக கவிதைகளிலுருந்து தொலைந்து போயிருந்தேன். இப்போது மீண்டும் கவிதைகளின் உலகில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் படித்த உலக்க கவிதைகளில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய சில கவிதைகளை ஒரு வாசகனின் சுதந்திரத்துடனும் ஒரு எழுத்தாளனின் பார்வையுடனும் தமிழில் தனிமுறை மொழிபெயர்ப்பு செய்வதற்கான எனது முயற்சி தான் இது.

கவிதை (Poetry)
எழுதியவர் : பாப்ளோ நெரூதா (Pablo Neruda)
பெயர் : கவிதை (Poetry)
மொழி : ஸ்பானியம்
நாடு : சிலே
ஆண்டு : 1964
தமிழாக்கம் : ஷாஜி

உலகக் கவிஞர்களின் கவிஞன் என்று அழைக்கப்படும் பாப்ளோ நெரூதா (1904-1973) தனது 60 ஆவது வயதில் எழுதியது கவிதை என்ற இக்கவிதை. ஸ்பானிய மொழியில் போயெசியா (Poesia) என்று அவர் பெயரிட்ட இக்கவிதைக்கு போயெட்ரீ (Poetry) என்ற பெயரில் பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஒரு கவிஞனாக தனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் நெரூதா, கவிதை என்பது எப்படி உயிருள்ள ஒன்றாக தன்னை தேடி வந்தது என்றும் அது தன்னை எப்படி முற்றிலுமாக ஆட்கொண்டது என்றும் இக்கவிதையில் விளக்குகிறார்.   
 
கவிதை
பாப்ளோ நெரூதா

அந்த வயதில் ஒருநாள் கவிதை வந்து சேர்ந்தது
என்னைத் தேடி
எங்கிருந்து என்று தெரியவில்லை
குளிர்காலத்திலிருந்தா? ஒரு நதியிலிருந்தா?
எப்படி? எப்போது?
ஒன்றுமே பிடிபடவில்லை

அது சொற்களாக வரவில்லை
சத்தங்களாகவோ மௌனமாகவோ வரவில்லை
அது என்னை வரவழைத்தது
ஒரு தெருமுனையிலிருந்து
இரவின் கிளைகளிலிருந்து
வன்மத்துடன் எரியும் நெருப்பிலிருந்து

அது பிறரிலிருந்து என்னை பிரித்தெடுத்தது
முகமற்றவனாக நான் தனிமையில் திரும்பும்போது
என்னை தொட்டது
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
எனது வாய் திறக்கவில்லை
எனது கண்கள் குருடாயின

ஆன்மாவில் ஏதோ ஒன்று இயங்கத் துவங்கியது
காய்ச்சலா? நான் எங்கேயோ மறந்து வைத்த எனது சிறகுகளா?
நெருப்பின் ரகசிய பாஷையை நானே மொழிபெயர்க்கத்துவங்கினேன்
வலுவற்ற எனது முதல் வரியை எழுதினேன்
தளர்ந்து மங்கலானது, பொருள் சொல்லவியலாதது
தூய்மையான மடத்தனம்
ஒன்றுமே தெரியாதவனின் பரிசுத்த ஞானம்

திடீரென்று ஆகாயம் கட்டவிழ்வதைக் கண்டேன்
கோள் கிரகங்கள் திறக்கப்பட்டன
தோப்புகள் துடித்தெழுந்தன
ஓட்டைகள் விழுந்த நிழல்களின்மேல்
இனம்புரியாத அம்புகள் பாய்ந்தன
பற்றியெரியும் தீ, பூக்கள்
சுழன்றடிக்கும் இரவு, பிரபஞ்சம்
எனது முடிவற்ற இருப்பு

விண்மீன்களின் வெறுமையை குடித்த போதையில்
சரிசமமாய், மறைபொருளின் உருவமாய்
அடியாழத்தின் தூய்மையான துண்டாய்
சக்கரங்களேறி நான் பயணிக்கத்துவங்கினேன்
நட்சத்திரங்களுடன்
என் இதயம் உடைந்து சிதறி காற்றில் தூசியாய் பறந்துபோனது

20130512

உலக இசைப் பாடல் - 1

இசைக்கு மொழியோ மொழிக்கு இசையோ தேவையில்லை என்பது தான் எப்போதுமே எனது கருத்து. சிறந்த இசை தன்னளவிலேயே உலகளாவிய மானுட மொழி. ஆனால் இசையின் பல வெளிப்பாட்டுக்களில் ஒன்றான பாடலுக்கு மொழி இன்றியமையாதது. சிறந்த இசையின் ஊடாக கவித்துவமான மொழி வெளிப்படும்போது தான் அரிதான பாடல்கள் பிறக்கின்றன. உலகம் முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான மொழிகளில் இத்தைகைய பல்லாயிரம் அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. இன்றும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. காலத்தால் ஒளிமங்காத அத்தகைய பாடல்களில் எனது மிகுந்த விருப்பத்திற்குரிய சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்து தருவதற்கான எளிய முயற்சிதான் இது.

சுதந்திரமாகப் பிறந்தவன் (Born Free)
எழுதி இசையமைத்து பாடியவர் – கிட் ராக் (Kid Rock)
பாடல் – சுதந்திரமாகப் பிறந்தவன் (Born Free)
பாடல் வகைமை - ராக்
மொழி – ஆங்கிலம்
நாடு – அமேரிக்கா
ஆண்டு – 2010
தமிழாக்கம் : ஷாஜி

அமேரிக்க சமகால வெகுஜென இசைப் பாடகர்களில் முக்கிய்மானவரான கிட் ராக் இன் நிஜப்பெயர் ராபர்ட் ஜேம்ஸ் ரிச்சி. 25 ஆண்டுகாலமாக இசைத்துறையில் பிரபலமாக இருக்கிறார். ராக், ராப், கண்ட்ரி இசை வகைமைகளில் பல புகழ்பெற்ற பாடல்களை உருவாக்கியவர். தனது பாடல்களின் வரிகளிலும் ஒலியமைப்பிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார். 

சுதந்திரமாகப் பிறந்தவன்

கரடுமுரடான பாதைகளில் வேகமாக பயணிக்க முயன்றவன்
வானுயர்ந்த மலைகளில் வலிந்து ஏறப் பார்த்தவன்
வீட்டிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டவன்
மழையில், மின்னலில் முரட்டுத்தனமாகப் பாய்ந்தவன்
அறிவுக்கு எட்டாத காட்டில் அலைந்து திரிந்தவன்

நான் திரும்பி வரவில்லையென்றால்
யாருமே எனக்காக அழக்கூடாது
ஒன்று மட்டுமே உலகிற்கு சொல்லுங்கள்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்

கொந்தளிக்கும் ஆற்றைப்போல் பாய்ந்தோடினேன்
கொடுங்காற்றிற்கு எதிராய் நடந்து சென்றேன்
கனவுகளை பின்தொடர்ந்து வேட்டையாடினேன்
காலத்துடன் பந்தயத்தில் ஓடி மோதினேன்
என் இதயம் காணாதவர்கள் குருடர்கள்
என் இதயம் காணாதவர்கள் குருடர்கள்

என்னை இடித்து விழவைத்தனர்
ஒழுகும் என் குருதி பார்த்து கொண்டாடினர்
இருந்தும் என்மேல் விலங்கு விழும் முன்
பறந்தோடினேன் நான் பறந்தோடினேன் 
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்

சாந்தமானவன் நான்
ஆபத்தின் கண்களில் ஆழ்ந்து பார்த்தவன்
அந்நியனைப்போல் எங்கோ தொலைந்துபோனவன்
வருத்தங்கள் ஏதுமே இல்லாதவன்

இலக்கை நெருங்கிவிட்டேன், அடையவில்லை
இன்று நான் சோர்வில் வலிகளில் வாடியவன்
அஸ்தமனத்திற்காக காத்திருக்கிறேன்
மறையும் முன்னும் மலை முகடில் நின்று உரக்க கத்துவேன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
நான் சுதந்திரமாகப் பிறந்தவன்
ஒளி இளகும் கடலுக்கு மாத்திரமே தலை வணங்குபவன்

பி பி ஸ்ரீநிவாஸ் – அழியாத குரல் – இந்தியா டுடே


பி பி ஸ்ரீநிவாஸின் பாடும்முறையில் சில சமயம் ஒரு இயந்திரத் தன்மை இருந்தது என்று பி பி ஸ்ரீநிவாஸ் - கடந்த காலங்களின் இசை வசந்தம் என்ற கட்டுரையில் நீங்கள்  எழுதியிருந்தீங்களே! உங்களது அந்தக் கட்டுரையே இயந்திரத் தனமானதாச்சே! என்று என்னை கடுமையாக விமரிசித்தார் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர் ஒருவர். அவரது விமரிசனம் நியாயமானது தான். ஏன் என்றால் அவர் ஒரு அதி தீவிர பி பி எஸ் ரசிகர்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பல பாடல்கள் அழியாத உணர்வாக என்றென்றும் நமது நினைவில் நிற்கக் கூடியவை. அவரது குரலும் பாடும் பாணியும் நமது இசையனுபவத்தின் நீங்காத பகுதிகள். அரிதான குரலுக்கு சொந்தக்காரராகயிருந்தும் ஓங்கும் குரல் வெளிப்பாட்டை விட சின்னஞ்சிறிய இசை நுணுக்கங்களுக்கும்  விவரணைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பாடியவர். 1950களில் இருந்து 1970கள் வரை தென்னிந்திய திரையிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக இருந்த பி.பி.எஸ் நமது திரையிசைப் பொற்காலத்தின் தவிர்க்க முடியாத பாடகர்.

கர்நாடக இசை வியாபித்திருந்த குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் இந்தித் திரைப் பாடல்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தவர் பி பி எஸ். அவற்றிலிருந்து பெற்ற தாக்கமே அவரது பாடும்முறை. பெரிதான இசைப் பயிற்சி எதுவுமே அவருக்கு இருந்ததில்லை என்றபோதிலும் "ஸ்வரங்களைப் பற்றி அவருக்கிருந்த ஞானமே பி பி எஸ்ஸின் பலம்" என்று எம்.எஸ்.விஸ்வநாதன் குறிப்பிட்டிருக்கிறார். மெட்டையும் பாடல் வரிகளையும் கேட்ட உடனே அவரால் திரும்பப் பாடமுடியும் என்றும் தனித்துவமான அவரது தொனியும் சிறப்பான குரலும் பாடலுடன் எளிதில் கலந்து விட்டன என்றும் எம் எஸ் வி கூறியிருக்கிறார்.

இந்தியில்தான் பி பி எஸின் ஆரம்பகாலப் பாடல்கள் பல வெளிவந்தன. இந்தி மொழியுடன் பிணைப்பில்லாத ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியிலிருந்து வந்திருந்தாலும் பி பி எஸின் இந்தி உச்சரிப்பு சிறப்பானது. மொழிகள் அவருக்கு கைவந்த கலை! எட்டு மொழிகளில் புலமையிருந்தது அவருக்கு. தனது திரையிசை வாழ்க்கையின் முதல் ஆண்டிலேயே தமிழிலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் வெளியான ஒரு படத்தில் இரண்டு தனிப் பாடல்களை பாடி அதன் மூலம் இந்த மூன்று மொழிகளிலும் பின்னணிப் பாடகரின் முக்கிய இடத்தைப் பெற்றவர் பி பி எஸ். மலையாளத்திலும் விரைவிலேயே தனக்கான இடத்தை உருவாக்கினார். யேசுதாஸின் வருகை வரைக்கும் அங்கு ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார் பி பி எஸ். 

தனது தாய்மொழியான தெலுங்கில் பி பி எஸுக்கு குறைவான பாடல்களே கிடைத்தன. ஆனால் கன்னட சினிமாவின் எக்காலத்திற்குமுரிய உச்ச நட்சத்திரம் ராஜ்குமாரின் பாடும் குரலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பி பி எஸ் கன்னட சினிமாவின் மிக முக்கியமான பாடகராக மாறினார். கன்னடத்தில் மட்டுமேதான் ஒரு உச்சநட்சத்திரப் பாடகராக பி பி எஸ் அங்கீகரிக்கப்பட்டார். தனது படத்தின் பாடல்களை ராஜ்குமார் சொந்தமாகப் பாடத்தொடங்கிய காலம் வரைக்கும் அது நீடித்தது. ராஜ்குமாருக்காக மட்டுமே ஏறத்தாழ இருநூறு படங்களில் பாடியிருக்கிறார் பி பி எஸ்! தமிழில் பெரும் வெற்றிபெற்ற நூற்றுக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இசைத்தரம் வாய்ந்த, அழகான பாடல்கள் அவருக்கு அதிகமாகக் வழங்கப்பட்டது தமிழில்தான்.

உணர்ச்சிகளின் உச்சங்களை அடைவதை விட சங்கதிகளை கச்சிதமாகவும் மென்மையாகவும் பாடுவதில் கவனம் செலுத்தியவர் பி பி எஸ். ஆனால் தனக்கு இயல்பாக வராத உணர்ச்சிகளைப் பாட ஒருபோதும் அவர் ஒருபோதும் போலியாக எத்தனித்ததில்லை. பி பி எஸின் பாடல்கள் நம்மை பரவச உணர்வின் உச்சிக்குக் கொண்டு செல்லாமல் போகலாம் என்றாலும் மனித வாழ்வின் அமைதியான, மென்மையான பல தருணங்களை தொட்டுச் செல்பவை அப்பாடல்கள்.

1970 களின் இறுதியிலேயே பி பி எஸ்ஸின் திரையிசை வாழ்வு முடிந்து போனது. பாடும் வாய்ப்புக்கள் குறைந்துபோன பின் தன்னை ஒரு பன்மொழிக் கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் முன்வைத்து வந்தார் பி பி எஸ். ஆனால் அதில் சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைத்ததாக தெரியவில்லை. தனக்காக மட்டுமே அவர் விடாமல் எழுதி வந்தார் என்றே படுகிறது.

அவருடைய கலைச்சேவையைப் பாராட்டி கர்நாடக அரசு அவருக்கு பெங்களூரில் இரண்டாயிரத்தி ஐநூறு சதுர அடி நிலத்தைப் பரிசளித்தது. பி பி எஸ்ஸின் ஆயுட்காலத்திலேயே அவருக்கு கிடைத்த தலைசிறந்த அங்கீகாரம் அதுவாகத் தான் இருக்கக் கூடும்! அதை வழங்கும்போது "இது மிக மிக தாமதமாக வழங்கப்படுகிறது, எனினும் ஒருபோதும் வழங்கப்படாமலே இருப்பதற்கு தாமதாயினும் சிறந்தது" என்று கர்நாடக முதலமைச்சர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசோ அவருக்கு கலைமாமணி விருதையும் ஒரு முறை இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியையும் மட்டுமே வழங்கியது. 

பி பி எஸுக்கு அவரது தகுதிக்கோ சாதனைகளுக்கோ ஏற்ற எந்தவொரு விருதுமே கிடைத்ததில்லை என்றே சொல்வேன். மாநில அரசுகளோ மத்திய அரசோ பிரதானமான எந்த விருதையும் அவருக்கு வழங்கவில்லை. பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்றவை போகட்டும் பிரபலமான எந்தவொரு தனியார் விருதுக்கும் கூட அவர் பரிந்துரைக்கப்படவில்லை! யாரென்றே தெரியாதவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கும் பல்வேறு பல்கலைக் கழகங்களும் பி பி எஸ்ஸை பொருட்படுத்தவில்லை.

ஒரு பாடல் தனக்கு மிகவும் பிடித்திருந்தால் அப்பாடகரின் வீட்டுக்கே சென்று அவரை பாராட்டும் குணம் படைத்திருந்த பி பி எஸ், எவ்வித அழைப்பும் இல்லாமலேயே சென்னையில் நிகழ்ந்துவந்த பல மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு சாதாரண பார்வையாளனாகச் சென்று கலைஞர்களைப் பாராட்டிக்கொண்டேயிருந்தவர்! தமிழ் திரை இசையில் மட்டுமே இதுவரைக்கும் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடகர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்று அறியும்போதாவது பி பி ஸ்ரீநிவாஸின் முக்கியத்துவம் என்னவென்று நமக்கு விளங்குமா? விளங்கினாலும் இனிமேல் என்ன பயன்? ஒரு பாடலில் அவர் பாடியதுபோல்
இனிமேல் ஒரு பிறப்பு உண்டோ?
இனிமேல் ஒரு இறப்பு உண்டோ?

பி பி ஸ்ரீநிவாஸ் (1930 – 2013) - அஞ்சலி


நிகழ்ச்சி நாள். காலையிலிருந்து பலமுறை அழைத்தும் அவர் அழைப்பை எடுக்கவேயில்லை. மதியத்திற்கு மேல் ஒரு முறை எடுத்து நான் மிகவும் சோர்வாகயிருக்கிறேன். என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியாதுஎன்று சொல்லி அழைப்பை துண்டித்தார் பி பி ஸ்ரீநிவாஸ். பலமுறை அவரை நான் சந்தித்திருக்கிறேன். விரிவாகப் பேசியிருக்கிறேன். என்னையும் என் எழுத்தையும் ஓரளவிற்கு அவருக்குத் தெரியும். இருந்தும் எதற்காக இப்படி செய்கிறார்? என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
  
“நீ உன் நிகழ்ச்சிக்கு அழைத்ததை மறந்துபோய் இன்னொரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் குண்டை தூக்கிப் போட்டது அதற்கு முன்தினம் தான்! பி பி எஸ்ஸும் வரவில்லை என்றால் என்ன செய்வேன்? யோசிப்பதே கஷ்டமாகயிருந்தது. எப்படியும் பிடித்த பிடியாக எம் எஸ் வியை அழைத்து வருவதற்கு ஒரு திட்டத்தைப் போட்டு நண்பர் அன்பு வை காருடன் பிற்பகலிலேயே எம் எஸ் வியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.

பி பி எஸ் விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நான் மீண்டும் மீண்டும் அவரை அழைத்துகொண்டேயிருந்தேன். ஒருமுறை அழைப்பை எடுத்த அவர் “ஷாஜீ, உனக்கு சொன்னால் புரியாதா? நமது உட்லேன்ட்ஸ் ஹோட்டல் இன்னைக்குதான் இழுத்து மூடினார்கள். நீதிமன்ற உத்தரவு! அது என்னோட வீடு. வாழ்வில் பாதிநாள் நான் வாழ்ந்த இடம். உன்னைப்போல் எத்தனையோ நண்பர்களை, ரசிகர்களை நான் சந்தித்த இடம் அது! அங்கே அமர்ந்து தானே என்னோட முக்கியமான இலக்கியங்களை எல்லாம் நான் எழுதினேன். இனிமேல் ஒருபோதும் அது திறக்காது. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்குதுஎன்றார். கடைசியில் என்னுடைய மன்றாடல்களுக்கு செவி மடுத்து மனதே இல்லாமல் சாயங்காலம் நியூ உட்லேன்ட்ஸ் ஹோட்டலுக்கு வந்து பார். முடிந்தால் வருகிறேன் என்றார்.

அன்று மாலையில் நிகழ்ச்சிக்கு பி பி எஸை கூட்டி வருவதற்காக நண்பர் கே பி வினோத் அதே சாலையின் இன்னொரு பகுதியில் உள்ள நியூ உட்லேன்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றார். நிகழ்ச்சி தொடங்க நேரம் நெருங்கி விட்டிருந்தது. ஒரு வழியாக எம் எஸ் வியை அழைத்து வருவதில் அன்பு வெற்றி கண்டார். ஒரளவிற்கு கூட்டமும் சேர்ந்திருந்தது. ஆனால் பி பி எஸ் வந்து சேரவில்லை.

சீக்கிரம் ஆரம்பிங்கப்பா. இத முடிச்சுட்டு தான் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு போணும்என்று எம் எஸ் வி என்னை நிர்பந்திக்க ஆரம்பித்தார். பதற்றத்துடன் நான் வினோத்தை அழைத்தேன். ஆனால் நெடுநேரம் அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தார். கடைசியில் இணைப்பு கிடைத்தபோது, “பி பி எஸ் உங்களுக்காக எதோ வாழ்த்து மடல் எழுதுகிறாராம். எழுத ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு. இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார்என்றார். நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரமாச்சு சார் என்று சொன்னதற்கு நிகழ்ச்சி எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால் வாழ்த்துக் கவிதை இப்போதுதான் எழுத முடியும் என்று சொன்னார் பி பி எஸ்.

2008ல் உயிர்மையும் மெஹ்தி ஹஸன் இசை மன்றமும் சேர்ந்து நடத்திய எனது ‘சொல்லில் அடங்காத இசை புத்தகத்தின் அறிமுக விழா நாளில்தான் இவையனைத்துமே நடந்தது. உட்லேன்ட்ஸ் உணவகம் என்றைக்குமாக மூடப்பட்டது அன்றைக்கு தான். அதில் மிகுந்த வருத்தத்தோடு இருந்த பி பி எஸ்ஸை பல வகைகளில் அந்த நிகழ்ச்சி மகிழ வைத்தது. பி பி எஸும் எம் எஸ் வியும் பல நாட்கள் கழித்து சந்தித்தது அந்த மேடையில் தான். இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

தனது வாழ்நாளில் பல காரணங்களினால் மறக்க முடியாத நாள் அது என்று பி பி எஸ் மேடையில் சொன்னார். தனது இசைப்பயணத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். உடல் நலமில்லை என்று சொல்லி நிகழ்ச்சி முடியும் முன் புறப்பட எழுந்த பி பி எஸ்ஸை ஒரு நிமிடம் அமர வேண்டினார் மேடையிலிருந்த இளம் தலைமுறைப் பாடகர் கார்த்திக். சார். நான் உங்களின் அதி தீவிர ரசிகன் என்று சொல்லி திடீரென்று அவர் பி பி எஸ்ஸின் காலங்களில் அவள் வசந்தம் பாடலை பாட ஆரம்பித்தார். பி பி எஸ்ஸின் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.

பி பி எஸ்ஸை பற்றி போன காலங்களின் இசை வசந்தம் என்கின்ற தலைப்பில் விரிவான ஒரு கட்டுரையை உயிர்மையில் நான் எழுதினேன். எனது இணைய தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் அந்த ஒரே கட்டுரை தான் பி பி எஸைப் பற்றி இதுவரைக்கும் இருக்கும் விரிவான ஒரே பதிவு. இது நான் மகிழ்ச்சியாக சொல்லவில்லை. தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு வெகுஜென இசையின் தவிர்க்க முடியாத ஆளுமையான பி பி எஸ்ஸைப் பற்றி இந்த மொழிகளின் வெகுஜெனக் கலை சார்ந்த இதழ்களால், ஊடகங்களால் சொல்லும்படியாக எதுவுமே பதிவு செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு துர்பாக்கியமானது!

நாங்கு தென்னிந்திய மொழிகளிலும் முன்னணிப் பாடகராக இருந்த பி பி எஸ்ஸுக்கு தனது வாழ்நாளில் சொல்லும்படியான எந்தவொரு விருதுமே கிடைக்கவில்லை. பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வரவில்லை. நாம் அவரை பெரிதாகக் கொண்டாடவுமில்லை. கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் அவர் இறந்தபோது இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ் நிருபர்கள் அருவருப்பான முறையில் சமகாலப் பாடகரான ஸ்ரீநிவாஸ் தான் இறந்துபோனார் என்று எழுதினார்கள்! (ஸ்ரீநிவாஸ் எனது நெருங்கிய நண்பர். பி பி எஸ் கலந்துகொண்ட அந்த புத்தக விழாவில் அவரது கஸல் கச்சேரியும் இருந்தது).

பி பி எஸ்ஸை பற்றியான எனது கட்டுரையுடன் இணைத்து இணையத்தில் நான் போட்டிருக்கும் புகைப்படங்கள் தான் உலகம் முழுவதுமுள்ள தொலைக்காட்சி, இணைய, அச்சு ஊடகங்கள் பி பி எஸ்ஸின் இரங்கல் செய்திக்காக பயன்படுத்தின. முன்சொன்ன உயிர்மை புத்தக விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் அவை!

நான் ஒரு வெகுஜென எழுத்தாளனோ வெகுஜென ஊடகங்களைச் சார்ந்தவனோ அல்ல. பி பி எஸ் எனது இசை ஆதர்சங்களில் ஒருவரும் அல்ல. இருந்தும் அவரது பல பாடல்களின் ரசிகன் என்ற முறையில் அவர் உயிருடன் இருந்தபோது அவரை மகிழ்விக்கும் அளவில் சிலதை செய்ய என்னால் முடிந்தது என்று நினைத்து சந்தோஷமடைய என்னால் முடியவில்லை. எல்லா சந்தோஷங்களும் மகிழ்ச்சிகளும் வாழ்க்கையைப் போலவே திடீரென்று மறைந்து போகின்றவை தானே!

பயணக்காரா போகுக போகுக
வாழ்க்கைப் பயணக்காரா..
உணர்வுகள் மட்டும் உனக்கு வழிகாட்டும்
உன் எண்ணங்கள் மட்டுமே உன்னுடன் நடக்கும்
பலர் வரலாம்
கொஞ்சநேரம் உன்னுடன் நடக்கலாம்
பின்னர் உன்னை புறக்கணித்து கடந்து போகலாம்
உணர்வுகள் மட்டும் உனக்கு வழிகாட்டும்
உன் எண்ணங்கள் மட்டுமே உன்னுடன் நடக்கும்
பயணக்காரா போகுக போகுக
வாழ்க்கைப் பயணக்காரா*
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய ஒரு மலையாளப் பாடல் இது.

* இப்பாடலின் இசை ஏ ஆர் ரஹ்மானின் அப்பா ஆர் கே சேகர். எழுத்து வயலார். இடம்பெற்ற படம் ஆயிஷா (1964)