20130512

ஷாஜி… உனது ஜாதி?




முக்கால் வாசி இந்தியர்களும் முட்டாள்கள் தாம். சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள்! ஜாதியையும் மதத்தையும் வைத்துக்கொண்டு யாராலையும் அவர்களை எளிதில் ஏமாற்ற முடியும். யார் வேண்டுமானாலும் சில நொடிகளில் ஒரு ஜாதி மதக் கலவரத்தை இங்கு தூண்டிவிட முடியும் - மார்கண்டேய் காட்ஜு (உச்சநீதிமன்ற நீதிபதி, இந்திய பத்திரிகைகள் மன்றத் தலைவர்)

“ஷாஜி என்பது உங்களது நிஜப்பெயரா புனைப் பெயரா?
நிஜப்பெயர்
உங்களது முழுப்பெயர் என்ன?
முழுப்பெயருமே ஷாஜி தான்
அப்படியா? அப்ப உங்கள் அப்பாவின் பெயர்?
என் அப்பாவின் பெயர் உங்களுக்கு எதுக்கு?
அது.. வந்து...

எனது பெயரிலிருந்து எனது ஜாதியும் மதமும் யூகிக்க முடியாமல் இப்படி அவஸ்தைப்படும் பல நபர்களை ஒரு எழுத்தாளனாக தமிழ்நாட்டில் நான் சந்தித்திருக்கிறேன். ஷாஜி என்பது கேரளத்தில் அனைத்து ஜாதி மதங்களும் வைத்துக்கொள்ளும் ஒரு ஆண்பெயர்.  நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் பிராம்மணர்களும், நாயர்களும், முஸ்லீம்களும், கிருத்தவர்களும், ஈழவர்களும், தலித் மக்களும் ஒரேபோல் தங்களது ஆண்குழந்தைகளுக்கு ஷாஜி என்ற பெயரை வைக்கிறார்கள்.

இதைத் தெரியாமல் ஷாஜி என்பது ஷாஜஹான் என்கின்ற இஸ்லாமியப் பெயரின் சுருக்கம் என்று புரிந்துகொண்டு என்னை பார்த்தவுடன் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்கிற எண்ணற்ற நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன். ஜனாப்ஷாஜி என்ற பெயரில் எனக்கு கடிதம் அனுப்பும் எழுத்தாள நண்பர்களும் இருக்கிறார்கள். இஸ்லாம் மதம் சார்ந்த பல இதழ்கள் எனக்கு மாதம் தோறும் இலவசமாக வந்துகொண்டிருக்கின்றன!

‘ஷாஜி ஒரு ஒரு மலையாளி பார்ப்பணன். அவன் ஒரு தமிழின விரோதி. புனைபெயரில் எழுதுகிறான். அவனது நேர்காணல் நமது தொலைக்காட்சியில் இடம்பெற்றிருக்கக் கூடாது என்று எனது நேர்காணலை ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்று சிலர் பிரச்சினை எழுப்பினார்கள்! எதற்கு? பிராம்மணனாகப் பிறந்த ஒரு அதிசயப் பாடகனைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் வேறு ஜாதியில் பிறந்த இன்னொரு பாடகனின்  பாடும்முறையைப் பற்றி எனது ரசனையை மட்டும் சார்ந்த சில விமர்சனங்களையும் முன்வைத்திருந்தேன். ஒரு ஜாதியை தூக்கிப்பிடித்து இன்னொன்றை இகழ்த்தும் எனது முயற்சியாக அதை வியாக்கியானம் செய்ததன் விளைவுதான் அந்த ஆர்ப்பாட்டம்!

அதிகமும் இசை மட்டுமே சார்ந்த எனது எழுத்துக்களை ஏற்கவோ மறுக்கவோ என் ஜாதியும் மதமும் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறதென்றால் அது எவ்வளவு துயரமானது! ஷாஜி கேரளாவிலிருந்து வரும் ஒரு மீனவக் கிருத்துவன். பரம்ரை பரம்பரையாக இசையிலே பிறந்து இசையிலேயே வாழ்ந்துவரும் பல உயர்ஜாதி இசைவல்லுநர்கள் நம்மிடமிருக்கும்போது இசை விமர்சனம் எழுத இவருக்கு என்ன தகுதியிருக்கிறது’? என்ற பொருள் வருமாறுள்ள சில கருத்துக்களை இணையத்தில் படித்தேன்! அதீதமான இசை நாட்டத்துடனும் இசை விருப்பத்துடனும் வாழ்ந்த உலக எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே  ஒரு மீனவக் கிருத்தவர்! பாடகர் யேசுதாஸுமே மீனவக் கிருத்துவ பின்புலத்திருந்து வருபவர்!

ஜாதி என்பது மனிதனுடனே பிறந்தது. அதை ஒருபோதும் ஒழிக்க முடியாது’,  என்றும் ‘ஜாதி நம் சமூகத்தில் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோட்பாடுஎன்றும், ஜாதி மிக முக்கியமானது, அதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய உண்மையான இடத்தையும் அவன் இவ்வாழ்க்கையில் என்னென்ன  செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்கிறதுஎன்றும்  ஜாதிக்கான பல நியாய வாதங்களை முன்வைப்பவர்கள் ஜாதி வெறியர்களை விட அறிவுஜீவிகள் தாம்! ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு அதன் குறிப்பிட்ட குணாதிசயங்கள் இருக்கும் என்பதிலும் எத்தனை தலைமுறை தாண்டினாலும் அவர்களால் அதிலிருந்து விடுபட முடியாது என்பதிலும் இவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை!

இந்திய துணைக்கண்ட நாடுகளிலும் இங்கிருந்து குடியேறியவர்கள் நிரம்பிய நாடுகளிலும் தானே இத்தகைய ஜாதிவெறி இருக்கிறது என்று கேட்டால், ஃப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோபிய நாடுகளிலும் ஜாதி இருக்கிறது, வெள்ளைக்காரர்களுக்கிடையே கூட ஆங்க்லோ ஸாக்ஸன்கள், ஜூட்கள், ஹிஸ்பானியர்கள் என ஜாதிகள் இருக்கின்றன என்றெல்லாம் இவர்கள் சொல்லுவார்கள்! அப்பெயர்கள் அந்தந்த மனிதர்களின் மூதாதையர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளைக் குறிக்கும் சொற்கள். உதாரணமாக ஜெர்மானியப் பகுதிகளிலிருந்து வந்து இங்கிலாந்தில் வாழ்ந்தவர்களின் பரம்பரைகள் ஆங்க்லோ ஸாக்ஸன்கள். ஏதாவது ஒரு முறையில் ஸ்பெயின் நாட்டுடன் தொடர்புடையவர்களின் வம்சாவளியினர் ஹிஸ்பானியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இது எதுவுமே இந்தியாவில் கடைபிடிக்கப்படும் ஜாதிவெறிக்கு நிகரானதில்லை.

இங்கு இரு ஜாதிகளிலிருந்து வரும் ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தனர் என்ற ஒரே காரணத்திற்காக அந்த ஊரே தீவைத்து எரிக்கப்படுகிறது! இரு குடும்பத்தையும் சார்ந்தவர்களில் சிலர் கொல்லப்படுகிறார்கள்! தற்கொலை செய்துகொள்கிறார்கள்! படுகாயமடைகிறார்கள்! அந்தக் காதலர்கள் எங்காவது ஓடிப்போய் வாழ நினைத்தால் வாழ்நாள் முழுவதும் அவர்களை தள்ளிவைக்கிறார்கள். மரணம் வரைக்கும் அத்தம்பதியை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். யோசித்து பாருங்கள்! இளவயது ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலும் காமமும் வருவது ஜாதியும் மதமும் பார்த்தா என்ன? ஒரு புன்னகையில், ஒரு கண்சிமிட்டலில் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் ஒரே கணத்தில் ஒருவன் உயிர்க் காதலில் விழுகிறான். ஒரு பார்வையில், ஒரு உடல் அசைவில் மனிதர்கள் காமம் கொள்கிறார்கள். ஊரு உலகத்திற்கு தெரியவராது என்றால் காம இச்சையை தீர்க்க யாரிடம் வேண்டுமானாலும் செல்ல தயாராக தானே பெரும்பாலானோர் இருக்கிறார்கள்! அது ஒரு உயிரியல் இயல்பு. நமது சுயநலத்திற்காக நாமே உருவாக்கிவிட்ட ஜாதி மதம் போன்ற விஷயங்களுக்கு அதில் எந்தவொரு பங்குமில்லை.

மனிதர்களை பிரித்து வைப்பதற்கும் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவதற்கும் அதற்காக அரசியல் செய்வதற்கும் ஜாதிக்கு நிகரானதாகவே இனம், மொழி, பிராந்தியம், தேசியம் போன்ற பிரிவினை உத்திகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவையனைத்திலுமே ஜாதிவெறிக்கு நிகரான ஒரு வெறியை நாம் காணலாம். எனது கடந்த நாற்பதாண்டு வாழ்க்கையில் இவற்றை நான் எப்படிச் சந்தித்தேன் என்றும் சொல்லத்தான் இங்கு முயல்கிறேன். இது என்னுடைய தனிமனித அவதானிப்புகளும் கருத்துகளும் மட்டுமே. சில வாழ்க்கைக் குறிப்புகள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். 

ஜாதி என்பது செய்யும் தொழிலைச் சார்ந்து உருவானது, பின்தொடரப்படுவது என்று சொல்லப்படுகிறது. ஆனால் எனது சிறு வயதில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதியிலுள்ள கிராமங்களை இந்த கூற்றுக்கு முற்றிலும் மாறானதாகத்தான் நான் உணர்ந்தேன். அங்கு நம்பூதிரிகள், நாயர்கள், முஸ்லிம்கள், உயர்ஜாதிக் கிருத்தவர்கள், தலித்துக்கள் என அனைவருமே செய்து வந்த தொழில் விவசாயம்! அங்குள்ள கடைத்தெருக்களிலும் அங்காடிகளிலும் கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுமே வேறு வேறு ஜாதிகளைச் சார்ந்தவர்களாகத்தான் இருந்தனர். விவசாயமும் வியாபாரமும் ஒரே நேரத்தில் செய்து வந்தவர்களும் இருந்தனர்.

முடிதிருத்தலை குலத்தொழிலாகக் கொண்ட பாஸ்கரன் மதியம் வரை தனது வயலில் வேலைசெய்து பிற்பகலில் தனது முடிதிருத்தகத்தை இயக்கினார். அவரது மூத்த மகன் மனோகரன் ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார். பாஸ்கரனின் மனைவி சாவித்திரி தான் எங்களூரின் ஆஸ்தான நடன ஆசிரியை. எல்லா உயர்ஜாதியினரின் பெண்குழந்தைகளுக்கும் சாவித்திரிச் சேச்சி நடனம் கற்றுக்கொடுத்தார். அவரது இளைய மகனும் எனது உயிர் தோழனுமான சலிம் குமாரின் நடனம் இல்லாமல் எங்களது பள்ளி நிகழ்ச்சிகள் நிறைவுபெறாது! சாவித்திரி சேச்சி எங்கள் ஊரின் ஒரே பிரபலமாகவும் நுண்கலை மையமாகவுமிருந்தார். நீ என்னை காதலித்தால் உனக்கு சாவித்திரி குளிக்கும் அந்த வாசனை சோப்பு ஒன்றை வாங்கித் தருகிறேன் என்ற பொருள் வரும் சாவித்ரி குளிக்கண சோப்பு தராம்என்ற பாடல் அப்போது அங்குள்ள இளவட்டங்களுக்கிடையே பிரபலம்.

காய்கறிகளும் கருவாடும் ஒரே கடையில் விற்றுவந்த ஓனாச்சன் ஒரு தலித். தவணை முறையில் வீட்டுப்பொருட்களை விற்றுவந்த மைனாக்குஞ்சூட்டியும் தலித். அவரிடமிருந்து வாங்கிய பாத்திரங்களில் தான் அங்கு பல நம்பூதிரிகளும் நாயர்களும் சோறு சமைத்து சாப்பிட்டனர். அனைத்து ஜாதிகளிலுமிருந்து வரும் விவசாய தினக்கூலிகளையும் அங்கு நான் பார்த்திருக்கிறேன். தேங்காய், பாக்கு மரங்களின்மேல் ஏறி காய்களை பறிக்கும் ஜோஸ் போன்ற உயர்ஜாதிக் கிருத்தவர்கள், கடைத்தெருவில் மூட்டைத்தூக்கும் ரமணன் நாயர், வயல்களில் நீர் இறைக்கும் வாசு நம்பூதிரி என அனைத்து தொழில்களையும் செய்யும் அனைத்து ஜாதியினராலும் அந்த ஊர்கள் நிரம்பியிருந்தன. 

செண்ட எனும் கேரள தாளக்கருவியை பரம்பரையாக இசைத்து வருவது மாரார் எனும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் தாம். ஆனால் எங்கள் ஊர்களில் காலம்காலமாக செண்ட மேளம் கொட்டுபவர்கள் காரப்பாட்டு குட்டி ஆசானும் அவரது உறவினர்களும். அவர்கள் சாம்பவர் எனும் தலித் ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது மேளம் முழங்காத எந்தவொரு கோவிலும் அப்பகுதிகளில் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பின்னர் கேரள சங்கீத நாடக அகாதமியின் சிறப்பு விருது காரப்பாட்டு குட்டி ஆசானுக்கு கிடைத்தபோது அவருக்காக மொத்த ஊரும் ஒன்றுகூடி எடுத்த மாபெரும் விழா இன்றும் எனக்கு ஞாபகமிருக்கிறது. அவர் இன்று உயிருடனில்லை. ஆனால் இன்றும் அவரது சந்ததி பரம்பரையினர் கேரளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலுள்ள பல கோவில்களிலும் கூட வந்து சிங்காரி மேளம் எனும் செண்ட மேளத்தை இசைத்து வருகிறார்கள்.

எங்கள் ஊரில் கோவில் அர்ச்சகர்களாகவோ கோவில் பிரமாணிகளாகவோ பிராம்மணர்கள் இருந்ததாக எனக்கு நினைவில்லை. கொஞ்சம் வைதீகம் தெரிந்து வைத்திருந்த நாயர்களும், ஏன் கீழ்ஜாதியாக கருதப்படும் ஈழவர்களும் கூட அங்கு அர்ச்சகர்களாக இருந்திருக்கிறார்கள்! அவர்கள் சாந்திகள் என்று அழைக்கப்பட்டனர். எங்கள் பக்கத்து கிராமத்தில் ஒரு சாந்தி இருந்தார். பல கோவில்களில் அர்ச்சகர் அவர். மிகுந்த பக்திமான்! ஆனால் ஒருநாள் தனது பதின்பருவத்து மகளை வன் புணர்ச்சிக்கு ஆளாக்க அவர் முயன்றபோது அப்பெண் ஒரு அரிவாளால் அவரது ஆணுறுப்பை வெட்டிமுறித்தாள். உயிர் தப்பித்த அவர் தனது முறிந்த லிங்கத்துடன் ஊர்விட்டு தப்பி ஓடினார். வேறு எதேனும் ஓர் ஊரில் கோவில் அர்ச்சகராகத்தான் அவர் வாழ்ந்திருப்பார்! ஏன் என்றால் அவருக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது!

ஜாதி வெறியர்கள் எங்களது கிராமங்களிலும் இருந்திருப்பார்கள் தாம். ஆனால் நான் அதை அங்கு ஒருபோதும் உணர்ந்ததில்லை. பால்யத்திலும் பதின்பருவத்திலும் எனக்கு எல்லா ஜாதியினர்களிலும் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். ஸ்ரீநிவாசன் நாயர் எனும் நண்பனின் வீட்டில் விளையாட்டிற்கு நானும் சலிம் குமாரும் கனியப்பனும் அச்சன் குஞ்சும் பிரியனும் ஸண்ணியும் ஒன்று கூடுவோம். ஸ்ரீநிவாசன் நாயரின் அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்து அவர்களது சமையல் அறையில் புகுந்து எதாவது ஒன்றை அரைகுறையாக சமைத்து சாப்பிடுவோம். முடிதிருத்தும் ஜாதிக்காரனும், முஸ்லிமும், தலித்தும், கிருத்துவனும், ஈழவனும், நாயரும் என வேறு வேறு ஜாதிக்காரர்கள்தான் நாங்கள் என்று அப்போது யாருமே நினைத்ததில்லை. இப்போது இது எழுதுவதற்காக யோசிக்கும்போது மட்டும் தான் நாங்கள் வேறு ஜாதிகளில் பிறந்தவர்கள் என்பதே எனக்கு ஞாபகம் வருகிறது! கீழ்ஜாதிப்பயல்கள் ஏறிஇறங்கியதால் அந்த நாயர் வீட்டிற்கு எந்தவொரு தீங்கும் விளையவில்லை என்றே நினைக்கிறேன். ஸ்ரீநிவாசன் நாயர் இன்று துபாயில் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக சந்தோஷமாகத்தான் இருக்கிறான்.

செய்யும் தொழில் சார்ந்தது, வாழ்க்கை முறை சார்ந்தது என்றெல்லாம் தோராயமாக சொல்லப்பட்டாலும் ஜாதிகளை இயக்குவதிலும் நிலைநாட்டுவதிலும் மதங்களின் பங்கு மிக முக்கியமானது. மதம் ஜாதியை விட பெரிய சிக்கலும் குழப்பமுமாகத்தான் நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். உதாரணமாக எனது மதம் என்னவென்று ஒருவர் கேட்கிறார் என்றும் அதற்கு நான் முஸ்லிம் என்று பதில் சொல்கிறேன் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். விஷயம் அங்கே முடியாது. சுன்னி, ஷியா, அஹ்மதிய்யா, இபாதி, குரானி, இஸ்லாமிய ராஜ்ஜியம் (Nation of Islam), சூபி  இவைகளில் எதை பின்பற்றுகிறவன் என்று சொல்லவேண்டியிருக்கும்! சுன்னி தான் என்று சொன்னால் அதில் ஹனாஃபி, மாலிகி, ஷாஃபி, ஹம்ப்லி, தௌஹீத், வஹாபி போன்ற எந்த வகைமையைச் சேர்ந்தவன் என்று சொல்ல வேண்டியிருக்கும்! மாறாக ஷியா தான் என்று சொன்னால்  அதிலிருக்கும் இத்னா அஷரிய்யா அல்லது பன்னிரண்டவர் எனப்படும் (Twelvers) பிரிவா இல்லை இஸ்மாயிலி பிரிவா இல்லை அதனுள் இருக்கும் போறா பிரிவா அல்லது ஜெய்திய்யா வகைமையா என்று சொல்லவேண்டியிருக்கும். இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ற இஸ்லாமிய இணையதளம் சொல்வதை கேளுங்கள். “முஸ்லிம் உலகம் எண்ணற்ற பிரிவுகளும் உட்பிரிவுகளுமாக பிளவுண்டு கிடக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி சட்டங்களும்  ஒழுங்குமுறை விதிகளும் இருக்கின்றன”.

கிருத்துவ மதத்தின் வகைமைகளையும் பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் பற்றி எழுத இதுபோன்ற எண்ணற்ற கட்டுரைகள் தேவைப்படலாம். கத்தோலிக்க கிருத்துவம் ( Catholic ), ஆச்சாரமான கிருத்துவம் (Orthodox), எதிற்புத்தன்மை கிருத்துவம் (Protestant), திரித்துவமற்ற கிருத்துவம் (Non Trinity), புது சிந்தனை கிருத்துவம் ( New Thought), யூத கிருத்துவம் ( Jewish Christians), மறைபொருள் கிருத்துவம் (Esoteric), சமரசக் கிருத்துவம் (Syncretistic) போன்ற முக்கிய வகைமைகளின் கீழ் பல்லாயிரக்கணக்கான பிரிவுகளும் உட்பிரிவுகளும் கொண்டது கிருத்துவ மதம். ரோமன் கத்தோலிக்க, லத்தீன் கத்தோலிக்க, சிறியன் கத்தோலிக்க போன்ற கத்தோலிக்க பிரிவுகளைப்பற்றியும் லூதரன், மெதடிஸ்ட், ஆங்க்லிகன், பிரதரன், பாப்டிஸ்ட், பெந்தகொஸ்தே போன்ற எதிற்புத்தன்மை கிருத்துவ சபைகளைப்பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கேரளத்தில் மட்டும் பிரபலமான யாக்கோபாய, காதோலிக (கத்தோலிக்க அல்ல), மார்த்தோம்மா போன்ற ஆச்சாரமான கிருத்துவ சபைகளைப்பற்றியும் அவற்றிலிருந்து கத்தோலிக்க சபையுடன் இணைந்த மலங்கர கத்தோலிக்க சபையைப்பற்றியும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இத்தகைய எத்தனையோ உட்பிரிவுகள் கிருத்துவத்திற்கு உண்டு!

பிரம்மாவின் உடலின் பல பகுதிகளிலிருந்து பிறந்தது என்று சொல்லப்படுகிற பிராம்மண, சத்ரிய, வைசிய, சூத்திர சாதுர் வர்ணியமும், பிரம்மாவின் கால் தூசியிலிருந்து பிறந்தது என்று சொல்லப்படக்கூடிய சண்டாள வகைமையும் தொழில் அடிப்படையிலான ஜாதிப்பிரிவுகள் என்று சொல்கிறார்கள்! ஆனால் வைணவ, சைவ, சாக்த, சௌர, ஸ்மார்த்த என்ற பிரதான வகைமைகளுக்கு கீழ் எத்தனை ஆயிரம் பிரிவுகளும் உட்பிரிவுகளும் இந்து மதத்தினுள் இருக்கின்றன! ஆதி சங்கரர் கற்பித்த மெய்மையை பின்பற்றக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகின்ற ஸ்மார்த பிராம்மணர்களில், ஐயர் என்கிற வகைமையைப்பற்றி பலருக்கு தெரியும். ஆனால் ஸ்மார்த பிராம்மணர்களின் சில முக்கியப் பிரிவுகளை பாருங்கள்! சர்யுபரீன், கன்யாகுப்ஜ, சாரஸ்வத், உட்கல, மைதிலி, கௌட, கர்ஹதே, தேசஸ்த, கொங்கணஸ்த, தேவருக்கெ, கௌட  சாரஸ்வத், சித்ராபூர், ராஜாபூர், ஹவ்யக, வைதிகி முலுகநாடு, வைதிகி வேலநாடு, வைதிகி வேகிநாடு, படகநாடு, ஹொய்சால கன்னடா, கோடா, பப்பூர் கம்மெ, அர்வேல் நியோகி, வைசிய வாணி......

கேரளத்திலுள்ள பிராம்மணர்களிலும் புஷ்பக, நம்பீசன், உண்ணி, பிரம்மணி, தைவம்பதி, பிலாப்பள்ளி என பல பிரிவுகள் இருக்கின்றன. அவற்றினுள் எண்ணற்ற கோத்திரங்களும் உப கோத்திரங்களும் உள்ளன. இந்து மதத்தின் ஒரு சிறு பகுதியான பிராம்மணர்களின் ஒரு பகுதியின் வகையறைகள் இவ்வளவு என்றால் இந்து மதத்தின் பெரும்பகுதியின் நிலைமையும் அவற்றிலுள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கையும் என்னவாக இருக்கும்! செட்டியார் என்ற ஒரு ஜாதிக்குள்ளே மட்டும் இருபத்தி நாங்கு உட்பிரிவுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது! ஒவ்வொரு மதத்திலும் ஜாதியிலும் உள்ள இந்த எண்ணற்ற பிரிவுகள் ஒன்றுக்கொன்று முரணானவை, வேற்றுமைகள் கொண்டவை. ஒரே ஜாதி என்று புறவயமாக சொல்லப்படுபவைகளுக்குள்ளேயே பல பல அடுக்கதிகாரப் படிநிலைகளும் தீண்டத்தகாமைகளும் போற்றப்படுகின்றன!

இந்த எண்ணற்ற ஜாதிகளும் மதங்களும் அவற்றின் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல்லாயிரம் பிரிவுகளும், அவற்றின் தனித்தனி சட்டங்களும்  ஒழுங்குமுறை விதிகளும், ஏறினால் அறுபதோ எழுபதோ ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் இந்த அற்ப வாழ்க்கையில் மனிதனுக்குத் தேவையா? இனப்பரிசுத்திக்கும் தூய்மைக்குமாக ஜாதி கடைப்பிடிக்கப்படுகிறது என்று இன்றும் பலர் நம்புகிறார்கள்! மனிதர்கள் மந்தைகளாக வாழ்ந்த காலகட்டத்தின் மிச்சம் மீதியான இந்தக் கருத்திற்கு இன்று என்ன முக்கியத்துவம் இருக்கிறது? தாய் என்பது ஒரு உண்மை ஆனால் தந்தை என்பது ஒரு நம்பிக்கை என்று சொல்வார்கள் அல்லவா? நமது நம்பிக்கைகள் அனைத்துமே உண்மையாக வாய்ப்பிருக்கிறதா? ரத்தத்தின் இனப்பரிசுத்தி எவ்வளவு என்பது உண்மையில் தாய் மட்டும் தானே அறிவாள்?

இரு ஜாதியினர்கள் கலப்புத்திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும்? ஆகாயம் இடிந்து விழுமா? கலப்புத்திருமணம் செய்துகொண்டு எந்த சிக்கலுமில்லாமல் சந்தோஷமாக வாழும் எத்தனையோ தம்பதியினரை எனக்குத் தெரியும். குறிப்பாக நகரங்களில். வேகமாக நகரும் நகர வாழ்க்கையில் ஜாதிமதங்களைப்பற்றி பெரிதாக யோசிக்க யாருக்கும் நேரமில்லை. எனது 25 ஆண்டுகால நகர வாழ்க்கையில் ஜாதியோ மதமோ ஒரு பெரும் பிரச்சினையாக எப்போதுமே நான் உணர்ந்ததில்லை.

தமிழ்நாட்டைப்போல் பல வட இந்திய மாநிலங்களிலும் கிராமங்களில்தான் ஜாதிமத வெறிகள் தலைதூக்கி ஆடுகின்றன. ஏன் என்றால் அங்கு மனிதர்களுக்கு வேலைகள் குறைவு. அவர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது! அடுத்தவனின் வாழ்க்கைக்குள்ளே எட்டிப் பார்ப்பதுதான் அங்கிருக்கும் பிரதான பொழுதுபோக்கே! இந்தியாவில் பலசமயம் கிராம வாழ்க்கைதான் மிகக் கொடூரமானது. அன்பும் பண்பும் பாசமும் நன்மைகளும் கிராமங்களில் வழிந்தோடுகின்றன என்பது ஒரு விருப்பக்கனவு மட்டுமே!
     
எனக்கு ஒரே ஒரு தங்கை. பட்டப்படிப்பு முடித்து திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கவிருந்த இடைவெளியில் ஒரு தாற்காலிக வேலைக்கு சேர்ந்தாள். அங்கு அவளுக்கு ஒரு தலித் கிருத்தவப் பையனுடன் காதல் ஏற்பட்டது! அவர் நேரடியாக வீட்டுக்கு வந்து பெண் கேட்டார். சமூக சேவையில் மும்முறமாகயிருந்த, ஜாதியையோ மதத்தையோ பெரிதாக பொருட்படுத்தாதவர் என்று சொல்லப்பட்ட எங்கள் அப்பா கோபத்தில் திளைத்தார், வெடித்து சிதறினார். தனக்கென்று ஒரு சூழ்நிலை வந்தபோது அவரது சமூகப்பொறுப்பு மாயமாகிவிட்டது! கர்நாடகத்தில் வேலை செய்துகொண்டிருந்த எனக்கு செய்தி வந்தது. அப்பாவும் மாமாக்களும் பெரும் பிரச்சினையை கிளப்ப தயாராகிக்கொண்டிருந்தார்கள். தங்கை மௌனமாகயிருந்தாள்.

நான் அவளிடம் பேச முயன்றபோது அவள் ஒன்று மட்டுமே சொன்னாள். “நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் இந்த உறவிலிருந்து நான் பின்வாங்கிக் கொள்கிறேன். ஆனால் மனதளவில் என்னால் ஒருபோதும் இதிலிருந்து மீள முடியாது. நான் வாழ்நாள் முழுவதும் இந்தவீட்டிலேயே இருந்துவிடுகிறேன். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும், அப்போது வேறு திருமணத்திற்கு வற்புறுத்தலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். அவளது அந்த உறுதிக்கு முன்னால் நான் பேச யோசித்ததெல்லாம் காணாமல்போனது. அத்திருமணத்திற்கு நான் துணை நின்றேன். அப்பாவை சம்மதிக்க வைப்பது மிகக் கடினமாகயிருந்தது. உற்றார் உறவினர்களின் பெரும் எதிர்ப்பு அலைகளுக்கு நடுவே என் தங்கையின் திருமணம் நடந்தது. நானும் எனது தம்பிகளும் அடக்கமுடியாத கண்ணீருடன் அவளை அனுப்பி வைத்தோம்.

அவளது கணவன் தனது வேலையில் உயர்ந்தார். அப்பா இறந்து போகும் வரை ஒரு நண்பனைப்போன்ற நெருக்கமான உறவை அப்பாவுடன் வைத்திருந்தார். என்னை எப்போதுமே நிராகரித்த என் அப்பா அவரை தனது மகனாகவே ஏற்றுக்கொண்டார் என்றே நினைக்கிறேன். என் தங்கைக்கு இரண்டு குழந்தைகள். பெண்ணிற்கு இப்போது 17 வயது. மாவட்டத்திலேயே சிறந்த மதிப்பெண்களை பெற்று சிறப்பாக படித்து வருகிறாள். மாநில அளவிலான சில கவிதைப் பரிசுகளையும் வென்றிருக்கிறாள்! 13 வயது பையனும் சிறப்பாக படிக்கிறான். நிறைய வாசிக்கிறான். கதைகள் எழுதுகிறான். என் தங்கை சந்தோஷமாகயிருக்கிறாள். அவள் கட்டும் புதுவீடு எங்கள் ஊரிலேயே தயாராகிக் கொண்டிருக்கிறது.

எப்போதுமே போரில் வாழும் இரண்டு ஜாதிகளிலிருந்து ஒரு இளவயது ஆணும் பெண்ணும் காதலில் விழுந்தனர். அந்த பெண் கர்பமானாள். அவளுக்கு அது தெரியவந்தபோது மிகத் தாமதமாகியிருந்தது. வெளியே தெரிந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து பயந்து நடுங்கிய அப்பெண் தனது கர்பத்தை கலைக்க ஆபத்தான பல மருந்து மாத்திரைகளை உட்கொண்டாள். ஆனால் அக்குழந்தை கலைய மறுத்தது. தனக்கென்று அமைக்கப்பட்ட எல்லா மரணக்குழிகளையும் தாண்டி அக்குழந்தை பிறவியெடுத்தது. பல உடல் ஊனங்களுடன், மூளைக்குறைபாடுகளுடன்! தனது வாழ்நாள் முழுவதுமே கண்ணீரிலும் துயரத்திலும் கழிக்கநேரும் அக்குழந்தையின் ஜாதி எதுவோ அது தான் எனது ஜாதி.