20120506

ராக் அன்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 1

லூசியானாவின் ஆழங்களில்

நியூ ஆர்லியன்ஸின் அருகாமையில்

ஒரு கரும் பச்சை நிறத்தாழ்வாரத்தில்

மண்ணும் மரமும் வேய்ந்த கூரையின் கீழ்

ஜானி பி குட் எனும் நாட்டுப்புற சிறுவன் வாழ்ந்தான்

எழுதப் படிக்கத் தெரியாதவன்

ஏழ்மையை மட்டுமே றிந்தவன்

அவனது கிட்டார் மட்டும் மணியோசையிலும் மதுரமாக ஒலித்தது

புறப்படு ஜானி, புறப்படு

புறப்படு ஜானி, புறப்படு

நலமாக இரு ஜானி


கோணிப் பையில் கட்டி கிட்டாரை சுமந்தான்

தண்டவாளங்களின் ஓரங்களில்

மரத்தடியில் அமர்ந்திருந்து இசைத்தான்

பாயும் ரயிலின் ஒலிபோல் வேகமாக இருந்தது அவனது தாளங்கள்

அவன் இசையை ரசித்து வழிப்போகர்கள் சொன்னார்கள்

அழகாய் இசைக்கிறான் நமது கிராமத்துச் சிறுவன்
புறப்படு ஜானி, புறப்படு

புறப்படு ஜானி, புறப்படு

நலமாக இரு ஜானி


அவனது அம்மா அழுகையில் சொன்னாள்

ஒருநாள் நீ உலகறியும் இசைஞனாவாய்

தொலைதூரத்திலிருந்தும் வருவார்கள்

இரவுமுழுவதும் உன் இசையை கேட்க

அனைத்து வண்ண விளக்குகளாலும்

அன்று எழுதப்படும் உனது பெயர்

புறப்படு ஜானி, புறப்படு

புறப்படு ஜானி, புறப்படு

நலமாக இரு ஜானி

ஒரு கறுப்பு வண்ண இசைத்தட்டிலிருந்து சக் பெர்ரி (Chuck Berry) யின் குதூகலக்குரலில் அந்த துள்ளலான பாடல், உணர்ச்சிப் பெருக்குள்ள கிட்டார் இசையுடன் அதிரும்போது அதன் வேகமான தாளத்தில் தலை அசைத்து கையால் கிட்டார் வாசிப்பதுபோல் நடித்து மகிழ்வாள் எனது சின்ன மகள். அவளுக்கு ஐந்து வயது. ஜானி பி குட் (Johnnie B Goode) என்கிற அப்பாடலுக்கு இன்று 55 வயது! கரும் பச்சை நிறத்தாழ்வாரத்தில் வாழும் கறுப்பு சிறுவனின் கிட்டார் இசை, தோல் நிறத்தின் வரப்புகள் அனைத்தையும் தாண்டிச் சென்று, பலவண்ண விளக்குகளால் உலகம் முழுவதும் எழுதப்படப்போகிறது என்று அப்பாடலில் புதைந்துள்ள இன ஒற்றுமையைப் பற்றியான வரிகளின் சூட்சுமம் எதுவுமே புரியாவிட்டாலும் என்ன? அப்பாடலின் தாளப்பெருக்கும் துள்ளலும், ஒரு முறையாவது அதை கேட்டவர்களை ஈர்த்திழுக்காமல் விடாது.

சிலகாலமாக நான் அதிகமாக இசை கேட்பது கறுப்பு வண்ண இசைத் தட்டுகளிலிருந்து தான். கறுப்பு நிறத்தில் புதிதாக குறுந்தகடுகள் வந்திருக்கிறது என்று நினைக்காதீர்கள். கிராமொஃபோன் ரெக்கார்டுகள் (Gramophone Records) என்று தோராயமாக அழைக்கப்படும் வினைல் இசைத் தட்டுகளைத்தான் (Vinyl Records) சொல்கிறேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு ஒலிநாடாக்களில் (Audio Cassettes) தொடங்கி, இசைத் தட்டுகள், ஒலிக் குறுந்தகடுகள் (Audio Compact Discs), உச்ச ஒலிக் குறுந்தகடுகள் (Super Audio Compact Discs) ஒலி மின்னணு ஒளித்தகடுகள் (Digital Video Disc - Audio) கணினி, போட் (iPod), பாட் (iPad) என பல பல வடிவூட்டங்களில் மாறி மாறி இசை கேட்ட பின்னர் நான் ஒரு முழுமையான முடிவுக்கு வந்தேன். சிறப்பாகப் பதிவு செய்யப்பட்ட இசைத் தட்டுகளில் இருப்பதுபோல் நுட்பமான உச்சபட்ச ஒலித் தரமென்பது வேறு எந்தவொரு ஒலிப்பதிவு வடிவூட்டத்திலும் கிடையாது என்று!

ஆனால் அத்தகைய இசைத்தட்டுகள் இன்று எங்கே கிடைக்கிறது? 1993ல் வந்த கிழக்குச் சீமையிலே திரைப்படப் பாடல்கள் தான் தமிழில் கடைசியாக வெளிவந்த இசைத் தட்டு. இந்தியாவில் கடைசியாக இசைத் தட்டுகள் பதிவானது 1990-93 காலகட்டத்தில் தான். அதன்பின் இங்கிருந்த இசைத் தட்டு பிரதிகள் உருவாக்கும் தொழிற் சாலைகள் அனைத்துமே மூடப்பட்டன. 1998ல் தில் தோ பாகல் ஹே ஹிந்திப் படத்திற்கும் 2004ல் வீர் சாரா ஹிந்திப் படத்திற்கும் மிகக்குறைவான எண்ணிக்கையில் இசைத் தட்டுகளை வெளிநாட்டில் பதிவுசெய்து இங்கு வெளியிட்டனர். இப்போது மீண்டும் ஒரு தலைப்புக்கு நூறோ இருநூறோ பிரதிகள் என இந்தியாவில் இசைத் தட்டுகள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. சினிமா இசை, கஸல், செவ்வியல் இசை என சில புதிய இசைத் தட்டுகள் இப்போது இந்தியச் சந்தையில் கிடைக்கிறது. மாபெரும் நகரங்களின் ஓரிரு இசைக் கடைகளில் மட்டும்தான் அவை விற்கப்படுகிறது. மலையாளத்தில் கடந்த ஆண்டு எனது நண்பரும் ஒரு குற்றலை வானொலியின் இசை மேலாளருமான ஷிஜோவின் முயற்சியினால் 1995-2005 கால அளவில் வந்த யேசுதாஸின் சில பாடல்களின் தொகுப்பொன்று இசைத் தட்டாக வெளியிடப்படிருக்கிறது.

ஆனால் ஜெர்மனி, நெதர்லேன்ட்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரித்து கொண்டுவரப்படும் இந்த இசைத் தட்டுகளின் சராசரி விலை இப்போது ஒன்றுக்கு 800லிருந்து 2500 ரூபா வரை! மும்பாயிலுள்ள ரிதம் ஹவுஸ் போன்ற சில கடைகளில் மட்டுமே இன்று கிடைத்துவரும் உலகயிசைத் தட்டுகளின் விலையோ 1000 ரூபாயிலிருந்து 5000 வரை! எப்படி வாங்கி கேட்க முடியும்! எனது பழைய சேகரிப்புகளிலிருந்தும் அத்துடன் இந்தியா முழுவதுமுள்ள சில இசை நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கியும்தான் இசைத் தட்டுகளை இப்போது நான் கேட்டுவருகிறேன். ராக் அன்ட் ரோல் எனும் உலக இசை வடிவத்தை உருவாக்கியவர் என்றே சொல்லக்கூடிய சக் பெர்ரியின் கிடைக்க அரிதான ஓரிரு இசைத்தட்டுகள் பலகாலமாக என் சேகரிப்பில் இருப்பவை.

மேற்கத்திய வெகுஜென இசை வடிவங்களைப்பற்றி பேசும்பொழுது முதன்முதலில் வரும் பெயர்கள் இரண்டு தான். பாப் இசை மற்றும் ராக் இசை. பாப் என்பது பாப்புலர் (Popular) என்பதின் சுருக்கம். மக்களின் நன்மதிப்புடைய இசை என்று பொருள். ஆனால் ராக் (Rock)?! பாறை, பாறாங்கல் என்றெல்லாம் தானே அதன் சாமானியமான பொருள்! பாறாங்கல்லுக்கும் இசைக்கும் என்ன தொடர்பு? ராக் என்றால் ஆட்டு என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அசைந்தாட்டு, குலுக்கு, தொட்டில் ஆட்டு என ஆட்டம் சார்ந்த வார்த்தையாக நூற்றாண்டுகளாக ஆங்கிலத்தில் அதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இசையினுள் அந்த சொல் நுழைந்து இப்போது வெறும் அறுபதாண்டுகள் தான் ஆகிறது.

ராக் என்கிற வார்த்தை தனியாக இசைக்கு வரவில்லை. சுழற்சி, புரள்வு, ஒலியதிர்வு, முரசு அல்லது முழவின் தொடர்ந்த முழக்கு, சொற்களின் தொடர்ச்சியான ஒழுங்கு என்றெல்லாம் பொருள் சொல்லக்கூடிய ரோல் (Roll) என்கிற சொல்லுடன் சேர்ந்து ராக் அன்ட் ரோல் ஆகத் தான் ராக் முதலில் இசையினுள் வந்தது. வேகமான நடனத்திற்கான இசை வடிவம் என்கிற பொருளுடன். ஆனால் அது ஒரு புதிய இசைவடிவமாக உயிர்கொண்டது சக் பெர்ரியின் மேபிலீன் (Maybellene) என்கிற பாடல் வழியாகத்தான். பின்னர் ராக் அன்ட் ரோல் இசை’(Rock and Roll Music) மற்றும் பள்ளி நாட்கள் (School Days) என்கிற தனது இரண்டு பாடல்களினூடாக அவ்விசை வடிவத்தை உலகப்புகழுக்கு கொண்டு சென்றார் சக் பெர்ரி. பள்ளி நாட்கள் பாடலில்தான் ராக் அன்ட் ரோல் நீடூழி வாழட்டும், பழையவற்றின் காலங்களிலிருந்து நம்மை விடுதலை செய்யட்டும் என்ற அறைகூவலை சக் பெர்ரி எழுப்பினார்.

மெதுவாக நகரும் தாளத்தில் உச்சஸ்தாயி ஆலாபனைகளைக்கொண்ட காஸ்பல் இசை (Gospel Music) எனும் வீரியமுள்ள இசை வடிவம் 1930-40களில் அமெரிக்க கறுப்பின மக்களிடம் பிரபலமானது. மந்தமான தாளத்தில் அவர்களது சோகமான வாழ்க்கையையும் மன அழுத்தங்களையும் ஆழமாக பிரதிபலித்த ப்ளூஸ் இசையும் (Blues) பலகாலமாக அவர்களது இசையாக இருந்தது. பின்னர் இளைஞர்களும் அதை ரசித்து ஏற்றெடுக்கும் வகையில் ரிதம் அன்ட் ப்ளூஸ் (Rhythm & Blues) என்கிற இசை பிறந்து பிரபலமானது. ஆனால் அதுவும் முற்றிலுமாக கறுப்பின மக்களின் இசையாகவே இருந்தது.

அதே காலத்தில் வெள்ளையர்களின் இசைகளாக கண்ட்ரி (Country) பாப் (Pop), ஜாஸ் (Jazz), ஸ்விங் (Swing) போன்றவை இருந்தன. அவர்களது இரவு நடனங்களுக்காக கொஞ்சம் வேகமான தாளம்கொண்ட கண்ட்ரி இசை வடிவமான ஹில்பில்லி(Hillbilly), ப்ளூகிராஸ் (Bluegrass) போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் மென்மையான இவ்விசைகள் எதிலும் சொல்லும்படியான துடிப்போ வீரியமோ இருந்ததில்லை. கறுப்பர்களின் இசை வடிவங்களை வெள்ளையர்களோ வெள்ளையர்களின் இசையை கறுப்பர்களோ திரும்பிக்கூட பார்க்காத காலம்! இனவெறுப்பு வெகுஜென இசையை முற்றிலுமாக பிரித்து வைத்திருந்த ஒரு கொடுமைக் காலம் அது.

அப்போதைய அமெரிக்காவின் முக்கியத்துவமற்ற மாநிலங்களில் ஒன்றாக கருதப்பட்ட மிசோரி(Missouri)யில் இருந்து புறப்பட்ட கிட்டத்தட்ட 30 வயதான ஒரு கறுப்பின இளைஞன் அந்நிலையை மாற்றியமைத்து வெள்ளையர்களையும் கறுப்பர்களையும் ஒரே வீச்சுடன் தனது இசையில் ஒன்றுசேர வைத்தார். ப்ளூஸின் நெஞ்சைத்தொடும் வரிகளும், ரிதம் அன்ட் ப்ளூஸின் துடிப்பும், காஸ்பல் இசையின் உச்சஸ்தாயி வீரியமும், ஜாஸ், ஸ்விங் இசைகளின் விறுவிறுப்பான பியானோப் பகுதிகளும், கண்ட்ரி இசையின் கிட்டார் பெருக்கெடுப்பும், ஹில்பில்லியின் நடனத்தூண்டலும், ப்ளூகிராஸின் எதைப்பற்றியும் கவலைப்படாத தன்மையும் ஒன்றிணைத்து ஒரு புதிய இசைக் கலவையை அவர் வளர்த்தெடுத்தார்.

அவ்விசையினூடாக ‘பழயவற்றின் காலங்களிலிருந்து எங்களை விடுதலை செய்யுங்கள்‘ என்று அவர் ஓங்கி முழங்கியபோது இசை உலகம் அதிர்ந்துபோனது. 15லிருந்து 30 வயது வரைக்குமான அனைத்து தரப்பு அமெரிக்க இளைஞர்களின் தேசிய கீதமாக அது மாறியது. இன்றுவரைக்கும் பிரபலமாகயிருக்கும் ராக் எனும் இசை வடிவம் அவ்வாறுதான் பிறவியெடுத்தது. இசையின் இனவேறுபாடுகள் அத்துடன்தான் மறையத்தொடங்கியது.

கண்ட்ரி இசையில் பயன்படுத்தும் சாதாரண கிட்டாரை கையொழித்து மின்னணு கிட்டாரை தனது இசையின் உள்ளே கொண்டுவந்தார் சக் பெர்ரி. லீட் கிட்டார் மட்டுமல்லாமல் பேஸ் கிட்டாரும் ரிதம் கிட்டாருமெல்லாம் மின்னணு கிட்டார்களே. கிட்டாரை வெகுஜென இசையில் பயன்படுத்தி வந்த முறைகளை மாற்றியமைத்து பல புது கிட்டார் உத்திகளை உருவாக்கினார். பியானோவின் மென்மைகளை துறந்து விசைவேகத்துடன் அதை பயன்படுத்தும் ஜாஸ் இசை உத்திகளை கையாண்டார். டிரம் வரிசையிலுள்ள ஸ்னேர் டிரம்மை தாளக்கட்டின் மையமாக்கினார். பேஸ் டிரம்மின் முழங்கும் நாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

மேற்கத்திய இசையின் அடிநாதமான சேர்ந்திசைவையும் (Harmony) கூட்டுக்குரல்களையும் (Chorus) மிகவும் குறைத்து ஒரே ஒரு பாடகனை இசையின் மையப்புள்ளி ஆக்கினார். சேர்ந்திசைவுகளை பக்கவாத்தியங்களில் முன்னெடுத்தார். எளிமையானதும் அத்துடன் கவித்துவமானதுமான வரிகள் ஒவ்வொரு பாட்டிலும் கொண்டுவந்தார். இனப்பிரச்சனையின் சிக்கல்கள், ஏழ்மை, அரசியல் போன்றவை ஒருபுறமிருக்க, காதல், காமம், பெண்களின் மீதான தீராத மோகம், பதின்பருவத்தினரின் பெரும் கனவாக இருக்கும் விதவிதமான கார்கள், மது, கட்டுப்பாடுகளுக்கு எதிரான கலகம் என அனைத்தையும் அவரது வரிகள் பாடுபொருளாக்கியது. ”தள்ளிப்படுங்கள் பீத்தோவன். உங்கள் இடத்தைக் கொஞ்சம் நான் எடுக்கிறேன். சைக்கோவ்ஸ்கியிடமும் இதைச் சொல்லிவிடுங்கள்என்று அவர் தனது தள்ளிப்படுங்கள் பீத்தோவன் (Roll Over Beethoven) என்கிற பாடலில் பாடியபோது அது செவ்வியல் இசையின் கட்டுப்பாடுகளை வெறுத்த இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய கிளர்ச்சியைக் கொடுத்தது

ஆறடி இரண்டங்குலம் உயரத்தில் கன்னங்கருப்பு தோல்வண்ணமும் மெலிந்து விளறி ஒடுங்கிப்போன கன்னங்களுமாக காட்சியளித்த சக் பெர்ரிக்கு எப்போதுமே அவரது நிஜவயதை விட இருபது வயதாவது அதிகமாக இருப்பதுபோல் தோன்றியது. வெயிலில் வாடி வறண்டுபோன ஒரு கிராமத்து ஏழை விவசாயி என்றோ அல்லது ஏதோ சிறுபட்டணத்தில் கசாப்பு கடை வைத்திருக்கும் ஆள் என்றோ அவரை முதலில் பார்க்கும் யாராவது நினைத்தால் ஆச்சரியமில்லை. அவரை பார்க்க ஒருவகையான அவலட்சணமாக இருப்பதாக 1950களின் சில கறுப்பின பெண்களே சொல்லியிருக்கிறார்கள்! ஆனால் அவரது குரலை மட்டும் வானொலியிலும் இசைத்தட்டுகளிலும் கேட்டவர்கள் அவரை ஒரு பேரழகன் என்றே நினைத்தார்கள். அவரது மேடைத்தோற்றத்தை பார்த்தவர்களோ வானுயர்ந்த அவரது தன்னம்பிக்கையையும், கேளிக்கை மேலாண்மையையும், நகைச்சுவை உணர்ச்சியையும் பார்த்து வாய்பிளந்து போனார்கள்.

தொடரும்.....