20141213

இணையம் தழுவும் எழுத்து



நமது காலம் நமது ரசனை – 2
உயிர்மை, டிசம்பர் 2014 

இலைகள்
மரப்பட்டை
விலங்குத் தோல்
பருத்தி இழை
செயற்கை இழை....
தடித்த எழுத்துக்களில் வேறு வேறு வண்ணங்களில் எழுதி மகளிடம் கொடுத்தேன்.
“இது போதுமா அப்பா? என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“அது இவ்வளவுதான்டா செல்லம் என்றேன்.
மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த கீதிப் பாப்பாவின் முகம் வாடிப்போயிருந்தது!

“என்னடா ஆச்சு?
“நேஹா, தியா, நித்தியா, மாதவ், அசுவின்.. அல்லாரும் நெறய பேஜில கலர் போட்டோ அல்லாம் ஒட்டி வச்சு எடுத்தினு வந்தாங்க. அவங்களுக்கல்லாம் மிஸ் அஞ்சு ஸ்டார் தந்தாங்க.. என்னோட புக்கப் பாருங்க!”. நான் அவளது வீட்டுப்பாடப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். நட்சத்திரங்கள் எதுவுமில்லை! மேலும் எல்லாமே தவறு என்பதுபோல் வெட்டியும் போட்டிருக்கிறார் வாத்தியாரம்மா! மனிதன் அணியும் உடைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எழுதத்தானே கேட்டிருந்தார்!

அடுத்தநாள் பள்ளிக்கு மகளை அழைத்து வரச் சென்றபோது என்ன நடந்தது என்று தெளிந்து விட்டது. வண்ணப்படங்களை ஒட்டி, விரிவான அட்டவணைகளைப் போல் தயாரித்த பல பக்கங்களில் மனித உடைகளின் வரலாற்றை விரிவாக விளக்கியிருந்தனர் பெரும்பாலான குழந்தைகள்! 135000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உடைகள் அணிய ஆரம்பித்ததிலிருந்து துவங்கும் தகவல்கள்! இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மின் அச்சிட்டவை!

“அதெல்லாம் தப்புடா.. நெட்டிலிருந்து அப்படி டவுண்லோட் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து ஒட்ட யாராலயும் முடியும். அப்பா எழுதிக் கொடுத்தது தான்டா ரைட்டு.... "ஆனால் எனக்கு ஒரு ஸ்டார் கூட கெடைக்கலையே...என்று ஏமாற்றத்தில் சோர்ந்த எனது மகளின் வார்த்தைகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

யோசித்துப் பார்த்தேன்! நான் அவளிடம் சொன்னது உண்மையா? இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பாடங்களை நிரப்புவதில் என்ன தவறு? மனிதன் உடைகள் அணிய ஆரம்பித்ததன் வரலாற்றை அனைவருமே தெரிந்து வைத்திருக்க வேண்டுமா? அத்தகவல்கள் கிடைக்குமிடத்திலிருந்து எடுக்கலாமே! எதைவேண்டுமானாலும் எடுக்கும் வாய்ப்பு இருக்கும்போது அதை பயன்படுத்துவது நல்லது தானே? அறிவுஜீவிகளான எழுத்தாளர்களே இணையத்திலிருந்து எண்ணற்ற விஷயங்களை எடுக்கிறார்களே!

இணையம் உலகை முற்றிலுமாக ஆக்கிரமித்திருக்கும் கடந்த பதினைந்தாண்டுகளில் இணையத்திலிருந்து தழுவி எழுதுகிறார் என்கின்ற குற்றச்சாட்டை சந்திக்காத எழுத்தாளர்கள் குறைவே. இணையம் இருப்பதனால் மட்டுமே பலர் எழுத்தாளர்களாகத் தங்களை முன்வைக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் இணையத்தின் வருகைக்கு வெகுகாலத்திற்கும் முன்னரே எழுத்தாளர்களாக தங்களை நிலைநாட்டியவர்களையும் இந்த குற்றச்சாட்டு விட்டபாடில்லை! தழுவல்தான் இங்கு பிரச்சினை என்றால் இணையம் வருவதற்குப் பல பதிற்றாண்டுகளுக்கு முன்பே தழுவி எழுதுவதை மும்முரமாக கையாண்டவற்களில் ஒருவன் நான்!

பத்தாவது வயதில் எனது முதல் எழுத்து பிரசுரமாது. ஒரு கவிதை! அது தந்த ஆர்வத்தில் எழுத்தாளன் ஆகியே தீருவேன் என்று முடிவெடுத்தேன். ஆனால் என்ன எழுதுவது? அப்பா என்னை அடித்துத் துவைத்தார் என்று எழுதினால் அதில் என்ன புதுமை இருக்கிறது? மகன்களை அடித்துக் கொடுமைப்படுத்தாத அப்பாக்கள் அந்த காலத்தில் எங்கிருந்தார்கள்! எழுத்தாளன் ஆகியே தீரவேண்டுமே! என்ன செய்வது?

ஒருநாள் ஜூனியர் விகடனில் தமிழ்நாட்டின் மேட்டுப்பட்டி எனும் கிராமத்தில் ஆயிரக்கணக்கான எருமைகளை ஒரு கோவில் சடங்கின் பகுதியாக பலி கொடுத்ததைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன். உடனடியாக அதை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துக் கேரள சப்தம் எனும் இதழுக்கு அனுப்பி வைத்தேன். எனது உண்மையான வயதோ தமிழோ தெரியாத ஆசிரியர், சம்பவ இடத்திற்கு நான் விரைந்து எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து எழுதியதாக நினைத்து அதைப் பிரசுரித்து 25 ரூபாய்க்கான காசோலையையும் எனக்கு அனுப்பி வைத்தார்! வாழ்க்கையில் முதலில் பார்த்த அந்தக் காசோலையைக் காசாக்க என்னால் முடியவில்லை என்றாலும் எழுதினால் பணம் கிடைக்கும் என்று அப்போது தெரியவந்தது. (அது அவ்வப்போது மட்டுமே நடக்கும் ஓர் அதிசயம் என்பதைப் பிற்பாடு தெரிந்துகொண்டேன்!)

பதினாறு வயதிருக்கும்போது ஒரு பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரதியில் முதியவயது உடலுறவுக்கு ஒரு கைப்புத்தகம் எனும் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். அந்த வயதின் காமக் கிளுகிளுப்பில் அதை படிக்க ஆரம்பித்த நான் அக்கட்டுரையை மொழிபெயர்த்து குடும்ப டாக்டர் எனும் ஆரோக்கிய மருத்துவ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு பெரிய பீரங்கிக் குழலுக்கு இருபுறமும் ஒரு கிழவனும் கிழவியும் நிற்பதுபோன்ற அட்டைப் படத்துடன் அட்டைக் கட்டுரையாக அதைப் பிரசுரித்தனர்!

சில வாரங்கள் கழித்து அவ்விதழின் ஆசிரியர் மனோகரன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஷாஜிக்கு, பழைய ரீடர்ஸ் டைஜஸ்டிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை சுட்டு எழுதிய ஒரு கட்டுரையை அனுப்பும்போது குறைந்த பட்சம் நன்றி – ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற ஒரு குறிப்பையாவது வைத்திருக்கலாம். இத்தகைய கட்டுரைகளைப் பிரசுரிப்பது பல வகையான  சட்டச் சிக்கல்களை வரவழைக்கக்கூடியது. அது உங்களுக்கும் எங்களுக்கும் நல்லதில்லை. பயந்து நடுங்கி ஒரு மூலையில் உட்கார்ந்துபோனேன்.

இதுபோன்ற எழுத்துக்களின் வழியாக எழுத்தாளனாக வேண்டியதில்லை என்று அன்று முடிவெடுத்தேன். தனது கடிதத்துடன் ஆசிரியர் 50 ரூபாய் காசோலையையும் வைத்திருந்தார்! முழுத்தேங்காய் கிடைத்த நாய் போல் அதைப் பலமாதம் கையில் வைத்திருந்தேன். வறுமை ஒரு மனிதனை எதுவும் செய்ய வைக்கும்! பணமில்லாமல் திண்டாடிய நாளொன்றில் அக்காசோலையை எடுத்து கோட்டயத்தில் உள்ள அவ்விதழின் அலுவலகத்திற்குச் சென்றேன். காற்றில் வளைந்து நிமிர்வதுபோன்ற ஒல்லி உடம்புக்கு மேல் அசைந்து தொங்கும் உடைகளுடன் பலவீனமாக நிற்கும் அந்தப் பதினாறு வயதுப் பையன் எழுதிய முதிவயது உடலுறவுக்கான் கைப்புத்தகத்தை நினைத்து ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஜனனி பிரசுரம் என்கின்ற பெயரில் பல இதழ்களை நடத்திக்கொண்டிருந்த அக்குழுமத்தின் தலைவர் தாமஸ் டி அம்பாட் அப்போது மலையாள களிப்புனைவு (Pulp Fiction) இலக்கியத்தின் பேய் மற்றும் துப்பறியும் கதை எழுத்தாளர்களில் ஓர் உச்ச நட்சத்திரம். ஒருகாலத்தில் அவர் எங்கள் ஊர்ப் பகுதிகளில் தங்கி கூலிவேலை செய்திருக்கிறாராம்! அந்த நினைவுகளாலோ என்னமோ, என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார். காசோலையைத் திருப்பி வாங்கி வரும்காலத்தில் நீ எழுதப்போகும் அசல் எழுத்துக்களுக்கு இது ஒரு முன்தொகை என்று சொல்லி ஒரு 100 ரூபாய் நோட்டை கையில் வைத்துத் தந்தார். எழுத்துக்காக எனக்கு கிடைத்த முதல் ஊதியம்!

எழுத்தில் அவர் ஒருபோதும் எனது ஆதர்சமாக இருந்தவரல்ல என்றாலும் பின்னர் பலமுறை நான் அவரைச் சந்தித்தேன். புகழும் செல்வமும் வாய்த்திருந்த ஒரு நட்சத்திர எழுத்தாளர் அவர். என்னை வைத்து அவருக்கு எந்த லாபமும் இருந்ததில்லை. ஆனால் நான் நேரில் சந்தித்த அந்த முதன்முதல் எழுத்தாளர் என்னிடம் மிகுந்த கருணையையும் அன்பையும் வெளிப்படுத்தினார். கார்கள் இருந்தபோதிலும் இருசக்கர வாகனங்களை நேசித்தவர். தனது புல்லட்டில் நெடுந்தொலைவு பயணம் செய்வதை விரும்பிய அவர் அத்தகைய ஒரு பயணத்திற்கு நடுவே சாலை விபத்தில் சிக்கி பரிதாபமக இறந்துபோனார்.

ஒரு முறை கோழிக்கோட்டின் ஒரு நட்சத்திர விடுதியில் நாவல் எழுதுவதற்காக தங்கியிருந்த அவரைச் சந்தித்த நாள் மறக்க முடியாது. எனக்கு நாரங்ஙா வெள்ளம் வாங்கித் தந்து அவர் விஸ்கி குடித்துக்கொண்டிருந்தார். அறை முழுவதும் பலவிஷயங்களைப் பற்றி இதழ்கள், கருப்புப் புத்தகங்கள் (Black Books), ஆங்கிலப் புனைவிலக்கியப் புத்தகங்கள், அறிவுத் தகவல் களஞ்சியங்கள் போன்றவை விரவிக் கிடந்தன. இது போன்ற புத்தகங்களை வாசிப்பதன் வழியாகவும் அவற்றிலிருந்து தகவல் தேடல் செய்வதன் வழியாகவும் நாம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்றும், நமது எழுத்திற்கான தகவல்களைச் சேகரித்துக்கொள்ளலாம் என்றும் அவர் என்னிடம் சொன்னார்.

எழுத்திற்கான தகவல்களை நாம் எங்கிருந்தாவது எடுத்தே ஆகவேண்டும். ஆண்டுகள், இடங்கள், பெயர்கள் போன்ற தகவல்களை படைப்பூக்கத்தால் உருவாக்கிவிட முடியாது. ஒரு காலத்தில் அதற்காக இதழ்களையும் புத்தகங்களையும் களஞ்சியங்களையும் பயன்படுத்தினோம். புத்தகங்கள் ஒருசிலருக்கு மட்டுமே கையெட்டும் தொலைவில் இருந்தன, இப்போதும் இருக்கின்றன! ஆனால் இணையம் ஒவ்வொருவரின் விரல் நுனிக்குமே இன்று வந்துவிட்டது! ஒரு தகவலுக்காக தடிமனான பல புத்தகங்களைப் பலமணிநேரம் இப்போது புரட்டவேண்டியதில்லை. இணையம் அனைத்தையும் எளிதாக்கியிருக்கிறது.

இணைய தளங்களிலிருந்து எடுக்கும் தகவல்களை உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த எழுத்துக்களைப் படித்த பின்னர் யோசனை பொங்கும் சில நண்பர்கள் இணையத்தில் அதைப் பற்றி வேறு என்னென்ன இருக்கிறது என்று தேடிப்பிடித்து ‘மார்க் ஷட்டர் பக் என்பவர் 1995லேயே இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதுகூட இவருக்குத் தெரியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்! இதற்கு ஒரு மறுபக்கமும் இருக்கிறது. விஷயமே அறியாத பலர் அங்கும் இங்குமிருந்து கிடைக்கும் குறிப்புச் சொற்களை கூகிள் செய்து தோ ஒன்றைப் படித்து, எல்லாம் தெரிந்தவர்களைப்போல் நடமாடும் அபாயம் நிகழ்கிறது.

சமீபத்தில் ஒரு விளம்பர நிறுவன அலுவலகத்தில் வரப்போகும் விளம்பர வரிசை ஒன்றுக்கான விவாதத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அசாதாரணமான கூற்றுகளுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவைப்படுகின்றன என்று கார்ல் சேகன் (Carl Sagan) சொல்லியிருக்கிறார்... என்று நான் சொன்னபோது அந்த நிறுவனத்தில் அதிகாரியாயிருக்கும் ஓர் இளைஞர் வான் அறிவியலாளர் கார்ல் சேகனைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்? என்று கேட்டார்!

அறிவியல் மேதையும் விண்வெளி ஆய்வாளரும் சிந்தனையாளரும் எழுத்தாளருமான கார்ல் சேகனைப்பற்றி இந்த இளைஞர் தெரிந்து வைத்திருக்கிறாரே! பரவாயில்லையே என்று ஒரு கம் நினைத்துக்கொண்டேன்! ஆனால் நான் பேசுவது எதையும் சரியாகக் கவனிக்காமல் முழுநேரமும் அவர் தனது ஐஃபோனில் நோண்டிக்கொண்டுதானே இருந்தார் என்று யோசித்தபோதுதான், அலைபேசி ஒலகத்துல கூகிள் கூகிள் பண்ணிப்பார்த்து தான் கார்ல் சேகன் யாரென்று அவர் கண்டுபிடித்தார் என்பது எனக்கு வெளிச்சமானது!

ஷாஜி என்கின்ற வார்த்தையின் பொருள் உருது மொழியில் தைரியமானவர் என்று. ஆனால் மவோரி மொழியில் அது....ஒரு படத்தில் என்னுடன் நடித்த ஒரு நடிகனின் இணைய விஞ்ஞானம் இப்படித்தான்போகிறது. நாம் எதைச் சொன்னாலும் அவர் அதை நமக்குத் தெரியாமல் கூகிள் பண்ணி தகவல்களை எடுப்பார்! பின்னர் யாருக்குமே தேவையில்லாத அத்தகவல்களை நமக்கு முன் கக்கி உயிரெடுப்பார்!

தனக்குத் தொடர்போ அக்கறையோ இல்லாத விஷயங்களை இணையத்திலிருந்து எடுத்துத் தன்னுடைய கண்டுபிடிப்பைப் போல் வழங்கிப் புகழைக் கோரும் ஆட்களின் எண்ணிக்கை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்று மிக அதிகம். வேடிக்கை என்னவென்றால் பலமுறை சரிபார்க்காமல் இணையத்தில், முக்கியமாக இந்தியத் துணைக்கண்டத்தின் பல இணைய தளங்களில் இருக்கும் தகவல்களைப் பயன்படுத்த முடியாது என்பதுதான். அங்கு தகவல்களைவிடத் தகவல் பிழைகளே நிரம்பி வழிகின்றன.

ஒரு விஷயத்தைப்பற்றித் தனக்கு முன்பின் எதுவுமே தெரியாது, தன்னுடைய சிந்தனைகளுக்கு அத்துடன் எந்தச் சம்பந்தமுமில்லை என்றிருக்கும்போதிலும், வாசகர்களுக்கு சுவாரசியத்தை அளிக்கும் வகையில் இணையத்தில் எங்கேயோ பார்த்த சிலவற்றை எடுத்து,பலகாலமாக இதைப்பற்றித்தான் நான் தியானித்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பழம்பெரும் பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் இறந்துபோனபோது பிரபல மலையாள இசை விமர்சகர் ஒருவர் சமகாலப் பாடகர் ஸ்ரீநிவாஸைப் பற்றிய இணையத் தகவல்களை எடுத்து ஒரு கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையின்படி 2008இன் சிறந்த பாடகருக்கான தமிழ்நாடு அரசு விருதைப் பெற்ற பின்னர்தான் பி பி ஸ்ரீநிவாஸ் இறந்தார்!

ஃபிலோமினா குட்டி என்று ஒரு பாடகியிருக்கிறாள், கேட்டிருக்கிறீர்களா? என்று ஓர் அன்பர் என்னிடம் கேட்டார்! ஏதோ புதிய மலையாளிக் குட்டி ஒருவள் பாடகியாக வந்திருக்கிறாள் என்று நினைத்தேன்! ஆஃப்ரோ பீட் எனும் ஆப்ரிக்க இசை வடிவத்தை நிறவெறிக்கு எதிரான போராட்டமாக முன்வைத்த நைஜீரிய கருவியிசைக் கலைஞரும் அரசியல் போராளியுமான ஃபெலா குடி (Fela Kuti) குறித்துத்தான் அவர் சொன்னார் என்று பிறகு எனக்குத் தெரியவந்தது. ஃபெலா குடி இறந்து கிட்டத்தட்ட இருபதாண்டுகளாபின்னர் அவரை ஃபிலோமினா குட்டி எனும் பாடகி ஆக்குகிறார்கள்!

நீங்கள் பல ஆங்கிலப் பாடகர்களைப்பற்றி சொல்லியிருக்கிறீர்களே..... ஆனால் எர்த்தா கிட்டை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று ஒருபெண்மணி எனக்கு மடல் அனுப்பினார். எர்த்தா கிட்டா? அந்தப் பெயரை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதேயில்லை! உலகில் இருக்கும் அனைத்து பாடகர்களையும் எனக்கு எப்படித் தெரியும்? இணையம் சரணம் கச்சாமி! தேடினேன்.

1950-60களில் அமேரிக்காவில் இருந்த ஒரு காபரே நடனப்பாடகி எர்த்தா கிட்ட். சில பாடல்களை இணையத்திலேயே கேட்டுப் பார்த்தேன். பாட்டு என்பதை விட உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள பேச்சுகள் அவை! காமச்சுவை கசியும் பாடல்களைத் தாம் அதிகமும் பாடியிருக்கிறார். அவரைக் கேட்காததில் எனக்கு வருத்தமேதும் தோன்றவில்லை! மடலுக்குப் பதில் அனுப்பினேன். ‘நீங்கள் எர்த்தா கிட்டின் ரசிகையா? அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?

“எனக்குத் தெரியாது. பிரின்ஸ் ராமவர்மா எழுதியதை நெட்டில் படித்தேன். நெட்டில் பாட்டு கேட்டேன். ஒன்றுமே புரியவில்லை. அதுதான் உங்களிடம் கேட்டேன் என்று பதில் வந்தது! பிரின்ஸ் ராமவர்மா என்ன எழுதியிருக்கிறார் என்று நானும் நெட்டில் பார்த்தேன்.

எனக்கு ஷோப்பாங் பிடிக்கும், பிசெட் பிடிக்கும்
பழையகாலப் பாடல்கள் பிடிக்கும்
நான்குபேர் கொண்ட தந்தியிசைக் குழு பிடிக்கும்
கிழக்கு ஆசிய தேவாலய குழு இசை பிடிக்கும்
ஆனால் எண்ணைக் கிணர்கள் பீப்பய்க்களில் எண்ணை நிரப்பும்
சளர்ர்ர்ப்ப் ஒலிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்... அமேரிக்காவின் முக்கியப்பாடகி எர்த்தா கிட்ட் இப்படிப் பாடினார்..என்று எழுதியிருக்கிறார்!

திருவாங்கூர் அரச பரம்பரையைச் சார்ந்தவரும், கர்நாடக இசைப் பாடகரும், இசை ஆசிரியரும், செவ்வியல் இசை ஆய்வாளருமான பிரின்ஸ் ராமவர்மா எதற்காக இதை எழுதினார் என்று அந்த கட்டுரையிலிருந்து எனக்கு விளங்கவில்லை! உழைக்கும் வர்க்க இசையின் முக்கியத்துவத்தை உணர்த்த ந்த வரிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார் என்று குத்துமதிப்பாக வைத்துக்கொண்டேன். ஆனால் அந்த வரிகளை எழுதியவர் எர்த்தா கிட்ட் இல்லையே! மார்வின் ஃபிஷெர் எனும் கறுப்பினப் பாடலாசிரியர் எழுதிய வரிகள் அவை!

பல இணைய தளங்களில் பல மணிநேரம் ஒத்துப்பார்த்துத் தேடித்தான் மேற்சொன்ன தகவல்களைக் கண்டுபிடித்தேன். அந்தப் பெண்மணியும் பிரின்ஸ் ராமவர்மாவும் நானும் இணையத்திலிருந்துதான் இந்த  தகவல்களை எடுத்திருக்கிறோம். ஆனால் தகவல்களை ஒவ்வொருவரும் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஷோப்பாங் (Chopin) மற்றும் பிசெட் (Bizet), மிக முக்கியமான மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பாளர்கள் என்று அறியாத,  நான்குபேர் கொண்ட தந்தியிசைக் குழு (String quartet), கிழக்கு ஆசிய தேவாலய குழு இசை (Polynesian carol) போன்றவை என்னவென்று உணராத ஆட்களுக்கு இந்த வரிகள் எப்படிப் புரியும்?

இலைகள், மரப்பட்டை, விலங்குத்தோல், பருத்தி இழை போன்றவற்றிலிருந்து அன்றும் இன்றும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன என்ற உண்மையைத் தெரியாதவர்களும் இணையத்தின் உதவியால் குழந்தைகளின் வீட்டுப் பாடத்தை நிரப்பலாம். அவர்கள் அக்குழந்தைகளின் பள்ளி ஆசிரியர்கள்கூட ஆகலாம். ஆனால் மனித உடைகளின் உண்மையான வரலாற்றை அறிய அவர்களால் ஒருபோதும் முடியாது.

1915 டிசம்பர் மாதத்தின் ஒரு மாலையில் இருட்டும் அழுக்கும் குழைந்த பாரிஸ் நகரத் தெருவொன்றில் ஒரு விளக்குக் கம்பத்தின் கீழ் பிறந்து விழுந்தாள் பிரான்சு நாட்டின் எக்காலத்திற்குமுரிய அதிசயப் பாடகி எடித் பியாஃப். தெருமுனைகளில் நின்றுகொண்டு பலர் பரிதாபமான அந்த மகப்பேற்றை வேடிக்கை பார்த்தனர். ஆடுமாடுகள் குட்டி போடுவதுபோல் பனிகொட்டும் சாலையோர நடைமேடையில் தனது மகளை பெற்றுப் போட்டாள் ஒரு தாய் என்று உள்ளுடைந்து எழுதும் ஓர் எழுத்தாளனை இணையத்தால் உருவாக்க முடியுமா?

shaajichennai@gmail.com