20130302

நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா?



சில வருடங்களாகிவிட்டன. சென்னையில் உள்ள நாரத கானசபாவில் ஒரு ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரி நடந்துகொண்டிருந்தது.  இளந்தலைமுறைப் பாடகரான சஞ்சீவ் அபயங்கர் பாடிக்கொண்டிருந்தார். கச்சேரி நன்றாக இருந்தது. பெரிய உணர்வெழுச்சிகள் அடைவது குறைவாக நேர்ந்தாலும் தேர்ந்த குரலில் முற்றிலும் சுருதி சுத்தமாகப் பாடக்கூடியவர் சஞ்சீவ். தடைகளில்லாமல் பிரவாகித்து ஓடும் ஒரு ஆற்றினைப் போன்றது அவரது பாடும்முறை.

என் பக்கத்தில் ஹிந்துஸ்தானி இசையில் அதிக ஈடுபாடு கொண்ட நண்பர் ஒருவர் அம்ர்ந்திருந்தார். அவர் தன்னுடைய நண்பர் ஒருவரையும் அழைத்து வந்திருந்தார். கச்சேரி இடைவேளையின்போது நான் அவரிடம் அரங்கில் இருந்த மோசமான ஒலியமைப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். ஒலியமைப்பின் பிரச்சினைகளினால் இது போன்ற இதமான இசைகூட எப்படி எரிச்சலூட்டுவதாக மாறிவிடுகிறது என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்பொழுது அந்த நண்பர்,தான் ஒரு புது சி டி பிளேயரை 2500 ரூபாய்க்கு வாங்கியதாகவும் அதைத் தேர்வு செய்வதற்கு தன்னுடன் வந்துள்ள நண்பர்தான் உதவி செய்தார் என்றும் தெரிவித்தார். என் அனுபவத்தில் அன்றைக்கு 2500 ரூபாய்க்குக் கிடைக்கும் சி டி பிளேயர் என்றால் நிச்சயம் தரக்குறைவான ஒரு உள்ளூர்த் தயாரிப்பாகத்தான் இருக்கும். அதில் பாட்டுக் கேட்பது தேர்ந்த இசை ரசனை உள்ளவர்களுக்கு நாராசமான அனுபவம். அத்தகைய ஒரு பிளேயர் வாங்குவதற்கு எதற்கு ஒரு நண்பரின் உதவி வேறு என்று தோன்றியது.

ஐந்தாயிரம், ஆறாயிரம் ரூபாய்க்கு நல்லதாக ஒரு மினி ம்யூசிக் சிஸ்டம் வாங்கியிருந்தால் அதில்  எல்லாவகையான  குறுந்தட்டுகளையும் கேட்கவும் பார்க்கவும் முடியுமே என்று நான் ஆலோசனை சொன்னேன். அது என் நண்பருடன் வந்திருந்தவருக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்க வேண்டும்! அவர் வேண்டா வெறுப்புடன், நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் ஒரே பெட்டிக்குள் பொருத்திய காம்போ (Combo) ம்யூசிக் சிஸ்டம்கள் பற்றித்தானே. அதில் இசை கேட்பது கர்ணகடூரமாக இருக்கும். அது இசையின் உயிரையே வாங்கிவிடும் என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. இந்த மனிதன் சிறந்த ஒலியுடன் இசை கேட்பதை நுட்பமாக அறிந்து வைத்துக் கொண்டுதான் பேசுகிறார். ஆனால் எதற்காக 2500 ரூபாய்க்கு மலிவான சி டி பிளேயர் வாங்கியிருக்கிறார் என்று யோசித்தபடியே என்ன பிளேயர் வாங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் உடனே மரான்ட்ஸ்  (Marantz)  என்றார். அதைக் கேட்டதும்  அதிர்ச்சியடைந்து போனேன். 

மரான்ட்ஸ் என்பது உலகின் சிறந்த ஆடியோ சி டி பிளேயர் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. விலையுயர்ந்த ரகம். 2500 ரூபாய்க்கு அது எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன். நண்பர் அதை இரண்டாம் விற்பனையில் (Second Hand) வாங்கியதாகச் சொன்னார். இப்போது எனக்குப் புரிந்தது! பல சமயம் இத்தகைய தரமான ஒலிக்கருவிகள் இரண்டாம் விற்பனையில் எளிதாகக் கிடைக்கின்றன. இசையின் ஒலிநுட்பம் அறிந்த ஒருவரின் உதவியுடன் இத்தகைய சிறந்த கருவிகளை குறைவான விலையில் வாங்கிவிட முடியும்.
அப்படித்தான் அவர்களும் வாங்கியிருப்பார்கள் என்று புரிந்தது. நான்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறேன் என்று நொந்தபடியே நானும் இசையின் சிறந்த ஒலிக்கான தொடர்ந்த தேடல் கொண்டவன் என்றும் இது போன்ற கருவிகளைத் தேடி வாங்கி இசை கேட்கக் கூடியவன் என்றும் விவரித்தேன்.  ஆனால்  அவர்களிடம்  சலனமேயில்லை!

ஹை-ஃபை (Hi - Fi) ஹோம் ஆடியோ சிஸ்டம் அல்லது வீடுகளில் பொருத்தப்படும் சிறந்த ஒலியமைப்புக் கருவிகளைப் பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன், இந்தத் தொழில்நுட்பம் குறித்து மும்பையிலிருந்து வெளியாகும் ஆங்கில இதழான ஏ வி மாக்ஸில் (AV Max) இசை குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்பதையெல்லாம் விளக்க முயன்றேன். அவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றே  தோன்றியது. ஒருவேளை நான் காம்போ சிஸ்டம் வாங்குங்கள் என்று சிபாரிசு செய்ததை வைத்து என்னை இந்த விஷயத்தில் எதுவும் தெரியாதவன் என்று அவர் நினைத்திருக்கலாம்.

உண்மையில் ஹை-ஃபை (Hi - Fidelity) ஒலி என்றால் என்ன? அதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அதை விளக்குவது சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்றாலும் ஒலியின்  தொழில்நுட்பம் குறிக்கும் ஆங்கில வார்த்தைகளையும்  பெயர்களையும் ஏராளமாகப்  பயன்படுத்தாமல் அதை விளக்க முடியாது என்கிற சிக்கலும் இருக்கிறது. நான் அதற்குள் எப்படிச்  சென்றேன்  என்பதை அறிந்து கொள்வதன்  வழியே நீங்களும் ஒருவேளை ஹை-ஃபை ஒலி பற்றித் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். 

நானும் நீண்டகாலம் ஒரு வாக்மேன் அல்லது  சாதாரண  கேசட் / சி டி பிளேயரில்தான்  இசை கேட்டுக் கொண்டிருந்தேன். எதிலிருந்து கேட்டால் என்ன, எல்லாம் இசைதானே என்ற மனோபாவமே எனக்கும் அப்போது இருந்தது. ஆனாலும் கூட 3000 வாட்ஸ் PMPO, 5000 வாட்ஸ் PMPO, Extra Bass, Dynamic Sound என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் ம்யூசிக் சிஸ்டம்களுக்கு எதாவது ஒரு பெரிய சிறப்பு இருக்கும் என்றும் அத்தகைய ஒன்றை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றும் ஓர் ஆசை உள்ளூர இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் அப்போதெல்லாம் அவைகளின் விலை எட்டமுடியாததாக இருந்தது. 

ஒருவழியாக 1997 இல் பெரிய சோனி (Sony) ம்யூசிக் சிஸ்டம் ஒன்றை வாங்கினேன். அதில் ஒரே நேரம் மூன்று குறுந்தகடுகளையும் இரண்டு ஒலிநாடாக்களையும் சுழல விடலாம். வி சி டியும் போட்டுப் பார்க்கலாம். 3000 வாட்ஸ் PMPO என்ற பளபளா ஸ்டிக்கர் ஒன்று அதன் மீது பெரிதாக ஒட்டப்பட்டிருந்தது. அதை பர்மா பஜாரில் பத்தொன்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். எனக்கு அது ஒரு மாபெரும் தொகை!

மிகச்சிறந்த ம்யூசிக் சிஸ்டம் ஒன்றை வாங்கிவிட்ட உச்சபட்ச சந்தோஷத்தில் அதை ஒரு ஆட்டோவில் ஏற்றி வைத்துக் கொண்டு ஆட்டோகாரன் கேட்ட தொகையை பேரம் பேசாமல் தருவதாகச் சொல்லியபடியே வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். வழியில் ஒரு போலீஸ்காரன் மடக்கி இது வெளிநாட்டுப் பொருள், இதை வாங்கியதற்கு முறையான ரசீது வேண்டும் என்று கேட்டார். அது அவரது வேலையில்லை என்று சண்டை போட வேண்டும் என்று மனதில் தோன்றிய போதும் அப்போதிருந்த சந்தோஷத்தில் போலீஸ்காரருக்கு 50 ரூபாய் கையூட்டு தந்து விட்டு அவசரமாக வீட்டிற்குக் கிளம்பினேன்.
புதிய ம்யூசிக் சிஸ்டம் வைப்பதற்காகவே உயரமான மேடை ஒன்று தயார் செய்தேன்.

அதில் வைத்துப் பார்ப்பதே ஆனந்தமாகவிருந்தது. கொஞ்சம் கூட தூசு படியாமல் அதைத் துடைத்துக் கொண்டேயிருந்தேன். சில நாட்கள் வெளியே கூடச் செல்லாமல் பகலும் இரவும் அதில் இசை கேட்டபடியே இருந்தேன். மூன்று குறுந்தட்டுகளும் இரண்டு ஒலிநாடாக்களும் மாறி மாறி முடிவில்லாமல் சுழன்று கொண்டேயிருந்தன. ஆனால் சில நாட்களிலேயே அதன் உரத்து அதிரும் ஒலி தெளிவற்றதும் சுவாரசியமில்லாததுமாக எனக்குப் பட்டது. அதில் இசை  கேட்கும்  ஆர்வம்  வடிந்து போனது. அந்த ஒலியை விட என்னுடைய பழைய சிறிய ப்ளேயரின் ஒலிதான் நன்றாக இருப்பது போல் தோன்ற ஆரம்பித்தது.

மெல்ல நான் எப்போதும் இசை கேட்கும் பழைய பிளேயருக்கு மாறத் துவங்கினேன். ஓரிரண்டு மாதத்தில் எனது மூவாயிரம் வாட்ஸ் ம்யூசிக் சிஸ்டத்திலிருந்து முற்றிலுமாக விலகிப் போனேன். எப்போதாவது அதில் வி சி டி போட்டு படம் பார்ப்பது கூட மோசமான அனுபவமாகவே மாறிப்போனது. 6 மாதம் முடியும் முன் தூசு படிந்து கிடந்த அந்த இசைப் பெட்டியை கிடைத்த விலைக்கு விற்று விட்டேன்.

நான் பணியாற்றிக் கொண்டிருந்த இசை நிறுவனத்தின் வேலைகளுக்காக அடிக்கடி ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கே கேட்கும் ஒலியின் பிரமிக்க வைக்கும் தரத்தைக் கேட்டு அதன் ஒரு சதவிகிதம் கூட வீட்டில் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உருவாகும். அந்த ஒலிப்பதிவுக் கூடங்களின் வடிவமைப்பில் பொருத்தியிருக்கும் முறையான ஒலித்தடுப்பான்கள் மற்றும் அதிநுட்ப ஒலிக்கருவிகள் தான் அந்தச் சிறந்த ஒலிக்குக் காரணம் என்று அறிந்திருந்தேன். சில ஒலிப்பதிவுக் கூடங்களின் ஒலியின் தரம் மோசமாக இருப்பதையும் உணர்ந்தேன்.

இப்படி ஒலியின் மேலான எனது கவனம் அதிகரிக்கத் துவங்கிய நாட்களில் நான் எங்கள் அலுவலகத்தில் இருந்த ம்யூசிக்   சிஸ்டத்தைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அதில் கேசட் ப்ளேயர், சி டி ப்ளேயர், ஆம்ப்ளிஃபையர், ஸ்பீக்கர்கள் என எல்லாம் தனித்தனியாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்பாகவும் இருந்தது. இரண்டு சிறிய ஸ்பீக்கர்களிலிருந்து மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் அதன் ஒலி வெளிப்பட்டது. அதில் இசை கேட்பது எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக மாறியது.

ஒரு நாள் மகேந்திரா என்ற நபரை தற்செயலாகச் சந்தித்தேன். அவர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒலி உபகரணங்களின் விற்பனை மற்றும் பொருத்துதல் செய்து வருபவர். அவரோடு பேசிக்கொண்டிருந்த போது அவரது பிரதான விருப்பம் வீட்டிற்குப் பொருத்தமான ஹை-ஃபை சவுண்ட் சிஸ்டம்களை உருவாக்கி பொருத்தித் தருவதும் சிறந்த ஒலிக்கான ஆலோசனைகள் வழங்குவதும்தான் என்று அறிந்து கொண்டேன். தன் ஆடியோ லேபுக்கு அவர் என்னை அழைத்தார்.

ஆழ்வார்பேட்டையில் இருந்த மகேந்திராவின் வீட்டுக்குச் சென்றேன். எங்கே பார்த்தாலும் ஒரே ஆடியோ உபகரணங்களாகவே கிடந்தன. பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த, விதவிதமான அளவுகளில் உள்ள ஸ்பீக்கர்கள், ஆம்ப்ளிஃபையர்கள், கேசட் ப்ளேயர்கள் மற்றும் எனக்கு இனம் தெரியாத பல்வேறு ஒலிக்கருவிகள்... அதில் பெரும்பான்மை ஒருமுறையாவது உபயோகபடுத்திய பின் விற்பனைக்கு வந்திருப்பவை. அவைகளில் பார்த்த பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் நான் முன் ஒருபோதும் அறியாதவை.

எங்கு பார்த்தாலும் ஒயர்களும் ஒலிக்கருவிகளுமாக நிரம்பியிருந்த தனது சோதனைக் கூடத்திற்குள் மகேந்திரா என்னை அழைத்துச் சென்றார். அங்கே மூன்று அடுக்குகளில் மூன்று வகையான ஒலிக் கருவிகளின் வரிசைகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு ஸ்பீக்கர் இணைப்புகள். துல்லியமாக இசை எதில் கேட்க முடிகிறது என்பதை அறிந்து கொள்ள ஒன்றுக்குப்பின் ஒன்றாக இரண்டு மாறுபட்ட ஆடியோ சிஸ்டம்களில் இசை கேட்க வேண்டும் என்று சொன்னார். 

அவர் ஒரு சி டி யை எடுத்து முதல் அடுக்கில் இருந்த பிளேயரில் போட்டார். அது சுழலத் துவங்கியதும் தெளிந்த பியானோ இசை இனிமையாகப் பீறிட்டது. அவ்வளவு துல்லியமாகவும் தரமாகவும் அதன் முன்பு நான் இசையைக் கேட்டதேயில்லை! மற்ற இரண்டு அடுக்குகளில் இருந்த வேறுபட்ட ஒலிக்கருவி வரிசைகளில் அதே சி டி யைக் கேட்டபோது முன்பு கேட்டதை விடவும் தெளிவாகவும் தரமாகவும் அந்த இசை ஒலித்தது. குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த மெல்லியதும் மிக நுட்பமானதுமான எல்லா ஒலிகளும் இனிமையாக என் காதுகளுக்குள் நிறைந்து வழிந்தன. எனக்குப் பிடித்தமான பல மேற்கத்திய இசை மற்றும் இந்திய இசைப் பாடல்களை ஆசை அடங்காமல் போட்டுப் போட்டுக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்த பிறகும்  இசையின் அந்த ஒலி அனுபவம் எனக்குள்ளாகவே அதிர்ந்து கொண்டிருந்தது. மகேந்திரா பரிந்துரைத்த இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையரை உடனடியாக விலைக்கு வாங்கினேன். ஒருமுறை உபயோகப்படுத்திய பின் விற்பனைக்கு வந்தவைதான். ஆனாலும் அது எனக்கு அடங்காத பெரும் செலவு. எல்லாவற்றையும்விட சிறந்த ஒலியுடன் இசையைக் கேட்க வேண்டும் என்ற வெறி தான் மேலோங்கியது. தரமான ஒலிக் கருவிகளில் மட்டும்தான் சரியாக இசை கேட்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன். அன்றிலிருந்து அத்தகைய கருவிகளின் ரசிகனும் ஆய்வாளனுமாக நானும் மாறிவிட்டேன்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஒலிக் கருவிகளில் கேட்கும் இசையின் தரமானது பதிவுசெய்யப்பட்டதின் பாதியைக் கூட எட்டுவதில்லை. அந்த இசையில் உள்ளடங்கியுள்ள பல்வேறு நுட்பமான ஒலிகளைத் துல்லியமாகப் பிரித்துக் கொடுப்பதற்கு இந்தக் கருவிகளால் சாத்தியமில்லை. பெரும்பாலானோர் பாடல்வரிகள் புரியுமளவுக்குக் கேட்பதையே இசை கேட்பதாக நினைத்து திருப்தி கொண்டுவிடுகிறார்கள். பலர் காதுகளுக்கு ஒரு பாடல் என்பது அதன் முக்கிய மெட்டும் மொத்தமான ஒரு ஒலியும்தான். அதன் நுணுக்கங்கள் எதுவும் அவர் காதுகளில் விழுவதில்லை.

ஆனால் சிலரது காதுகள் மிக நுட்பமானவை. அவை ஒவ்வொரு சிறு இசைஒலிகளையும் பிரித்து அறிந்து ரசிக்கக் கூடியவை. அவர்கள் தாங்கள் கேட்கும் இசையுடன் அதன் ஒலியையும் தங்கள் நினைவில் தேக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களால் இசையின் ஒலித் தரத்தைப் பிரித்துப் பார்க்க முடியும். உடனடியாக எது துல்லியமான ஒலி என்பதை அடையாளம் கண்டுவிடவும் முடியும். இப்படிப்பட்டவர்களை  ஆங்கிலத்தில்  ஆடியோஃபைல் (Audiophile) என்று சொல்வார்கள். இவர்கள் மிகச் சிறந்த  ஒலிக் கருவிகளில் மட்டுமே இசை கேட்பதை விரும்பக் கூடியவர்கள். இசை கேட்பதன் ஒலிநுட்பமும் அதன் தொழில்நுட்பமும் அறிந்தவர்கள்.

தரமான இசைஒலியை அடைவதற்குத் தரமான பல்வேறு வகைப்பட்ட ஒலிக்கருவிகள் மிக அவசியம். அவை  ஒவ்வொன்றையும்  இணைக்கும் ஒயர்களின் தரம் கூட அந்த ஒலியின் தரத்தைத் தீர்மானிக்கக்கூடும். பெரும்பாலும் இந்தக் கருவிகளில் ஒவ்வொன்றுமே வேறு வேறு நிறுவனங்களின் தயாரிப்பாகத்தான் இருக்கும். வெகுஜன மத்தியில் பெரும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் எதுவுமே பெரும்பாலும் ஆடியோஃபைல் தரத்துக்கு ஏற்றவையாக இருப்பதில்லை. பொதுவில் இத்தகைய கருவிகள் வெகுஜன ஊடகங்களில் விளம்பரப்படுத்தி விற்கப்படுவதுமில்லை. மாறாக இவைகளின் விபரங்களும் விளம்பரங்களும் கொண்ட தனிப்பட்ட இதழ்கள் ஆடியோஃபைல்களுக்காக உலகெங்கும் வெளிவருகின்றன. Hi-Fi, What Hi-Fi, Home Sound News, Home Cinema, Stereophile, AV Max போன்றவை உதாரணங்கள். பிரத்தியேகமான கடைகளில் மட்டும்தான் இத்தகைய கருவிகள் விற்கப்படுகின்றன. அவை ஆடியோஃபைல்களால் தேடிக் கண்டுபிடித்து வாங்கப்படுகின்றன.

விலை நிலைக்குத் தகுந்தாற் போல தரமான ஒலிக்கருவிகளின் வரிசையை ஆரம்ப`நிலை, மத்திய நிலை, உச்ச நிலை என மூன்று நிலைகளில் பிரிக்கலாம். தேவையும் பொருளாதார வசதியும் வைத்து இந்த உபகரணங்களில் எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்யலாம். இவற்றில் பலதின் விலை சில சொகுசுக் கார்களின் விலையைவிட அதிகம் என்பது சாதாரணமான விஷயம். பல கோடி ரூபாய்கள் விலைமதிப்புள்ள பல ஒலிக்கருவிகளும் உள்ளன.

ப்ளேயர், ஆம்ப்ளிஃபைர், ஸ்பீக்கர்கள் இவை அடங்கிய ஒரு ஆரம்ப நிலை ஒலிக்கருவி வரிசையின் விலை ஐம்பதாயிரம் வரைக்கும் இருக்கக் கூடும். இரண்டாம் விற்பனையில் வாங்கினால் இருபதாயிரம் ரூபாய்க்கு ஒரு ஆரம்ப நிலை ஒலிக்கருவி வரிசையை உருவாக்கலாம். மத்திய நிலையில் இது ஒரு லட்சம் தாண்டலாம். உச்சநிலை ஒலிக்கருவி வரிசை ஒன்று பத்து லட்சத்துக்கு மேல் விலைபோகலாம். வீட்டில் சினிமா பார்க்க உதவும் பல உயர்தர ஹோம் தியேட்டர் ஒலிக்கருவிகளின் விலை ஒரு உயர்தொழில்நுட்ப டிவியின் விலையைவிடப் பல மடங்கு அதிகமானது. இந்தக் கருவிகள் கச்சிதமாகவும் மிக அழகாகவும் வடிவமைக்கபட்டவையும்கூட.

பலவிதமான ஒலிக்கருவி வரிசைகளிலும் விலை உயர்ந்த ஸ்பீக்கர்களிலும் நான் இசையைக் கேட்டிருக்கிறேன். விலைக்கு ஏற்ப ஒலியின் தரம் உயர்ந்திருப்பதை அறிந்துமிருக்கிறேன் என்றாலும் எப்போதுமே விலைக்கு ஏற்றாற்போல ஒலியின் தரம் உயர்ந்து நிற்கும் என்று சொல்ல முடியாது. சில சமயம் ஐம்பதாயிரம் ரூபாயின் கருவிகள் ஐந்து லட்சத்தின் கருவிகளைவிட சிறந்த ஒலி படைப்பதை கவனித்திருக்கிறேன். நாம் இசை கேட்கும் அறையின் வடிவமைப்புடன் பொருந்திப்போகும் துல்லியமான ஒலிக்கருவிகளை அடையாளம் கண்டு, தேர்ந்தெடுத்து சரியாகப் பொருத்துவது தான் விலையை விட இதில் மிக முக்கியமானது.

இசையின் ஒலியை தரத்தோடு ரசிப்பவர்கள் ஆடியோ சி டி மற்றும் எப் எம் ரேடியோ அல்லது வினைல் இசைத்தட்டுகள் போன்றவற்றிலிருந்து மட்டும்தான் இசை கேட்க  விரும்புகிறார்கள். எம்பி3-ஐ ஒரு இசைக் குப்பையாக கருதும் அவர்கள் ஒருபோதும் அதை ஒத்துக் கொள்வதில்லை. மாறாக சூப்பர் ஆடியோ சி டி மற்றும் டி வி டியில் பதிவு செய்யப்பட்ட இசை போன்ற உயர்தொழில்நுட்ப ஒலிப்பதிவுகளில் இசை கேட்பதில்தான் அவர்கள் பெரிதும் ஆர்வம் கொள்கிறார்கள்.

சிலர் இப்போதும் பழைய காலத்து தொழில்நுட்பமான வினைல் இசைத்தட்டுகளில் இசை கேட்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நவீனத் தொழில்நுட்பத்துடன் உள்ள ரிக்கார்ட் பிளேயர்கள் இன்று ஆடியோ ஃபைல் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அதன் விலை மிக அதிகம். உதாரணமாக ரோக்சன் ஜெரெக்ஸ் (Roksan Xerxes) என்ற மத்திய நிலை ரிக்கார்ட் பிளேயரின் விலை இரண்டு லட்சம். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் விலை போகும் ரிக்கார்ட் பிளேயர்களும் உள்ளன!

நாம் டி வி டி பிளேயர்களிலேயே இசையும் கேட்க முடியும் அல்லவா? ஆனால் இவைகளில் படத்துடன் வரும் ஒலி நன்றாக இருந்தாலும் கூட இவற்றில் இசை மட்டும் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகள்  சிறப்பாக இயங்குவதில்லை. சிறந்த ஒலியுடன் இசை கேட்க விரும்புபவர்கள் ஒருபோதும் இத்தகைய வீடியோ பிளேயர்களில் இசை கேட்பதில்லை. இசை கேட்பதற்கு என்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ஆடியோ சி டி பிளேயர்களில் மட்டும்தான் அவர்கள் இசை கேட்கிறார்கள். அத்தகைய ஆடியோ சி டி பிளேயர்களின் விலை அதிகமானது. உதாரணத்திற்கு மரான்ட்ஸ் அல்லது நாட் (NAD) நிறுவனங்களின் ஆரம்ப நிலை பிளேயர்களின் விலை இருபதாயிரத்திற்கும் மேலே.

தரமான பிளேயர்களுடன் சரியான ஆம்ப்ளிஃபையர்கள் சிறந்த ஒலிக்கு மிக அவசியமானவை. காரணம் இவையே பிளேயர்களிலிருந்து வரும் ஒலி அலைகளைப் பிரித்து, பெருக்கி முறைப்படுத்தித் தருகின்றன. இவற்றிலிருந்துதான் ஒலிகள் மின் அலைகளாக ஸ்பீக்கர்களுக்குச் செல்லுகின்றன. இதில் செயல்படும் மின் சக்தியின் அழுத்தத்தின் அளவு RMS என்று அழைக்கப்படுகிறது. அதிக RMS என்றால் ஒலிக்கு அதிக அழுத்தமும் தெளிவும் என்று அர்த்தம். முன் சொன்ன மாதிரி பல ஆடியோ கருவிகளின் விளம்பரங்களில் PMPO (Peak Music Power Output) எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒலி நிபுணர்கள் மத்தியில் இதுக்கு எந்த மதிப்பும் கிடையாது. இது வெறும் கவனம் கவரும் வியாபார உத்தி மட்டுமே.

இரண்டு சேனல் கொண்ட ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையர்கள் தான் இசை கேட்பதற்கு உரியவை. ஆனால் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு உதவியாக 5.1. மற்றும் 7.1 சேனல்கள் கொண்ட மல்டி சேனல் ஆம்ப்ளிஃபையர்கள் தேவைப்படுகின்றன. டிஜிட்டில் தொழில்நுட்பம் வந்த பிறகும் பழைய வால்வ் முறை ஆம்ப்ளிஃபையர்களுக்கு தனித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அவை தரும் ஒலியின் தரம் அபூர்வமானது.

உயர்ந்த ஒலித்தரத்துடன் இசை கேட்பதில் ஸ்பீக்கர்களின் இடம் மிக முக்கியமானது. பல்வேறு தரநிலைகளில், விலைகளில் ஸ்பீக்கர்கள் ஆடியோஃபைல் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரணமாக இருபதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரைதான் அவற்றின் விலை என்றாலும் இரண்டு ஸ்பீக்கர்களுக்கு 45 லட்சம் ரூபாய் என்ற விளம்பரம் ஏ வி மாக்ஸில் பார்த்த ஞாபகமும் இருக்கிறது!

ஸ்பீக்கர்களை நாம் வீட்டில் பொருத்தும் போது அறையின் அளவு மற்றும் எவ்வளவு உயரத்தில் எந்த இடத்தில் அவை பொருத்தப்படுகின்றன என்பதும் முக்கியமானது. காரணம் ஒலிஅலைகள் தரையில் சுவரில் மற்றும் தடைபடும் பொருட்களின் மீதுபட்டு எதிரொலிக்கக் கூடியவை. ஆகவே சிறந்த ஒலியில் இசை கேட்பதற்கு சரியான இட அளவும் அமைப்பும் அவசியமானது. ஆகவே தீவிர இசையொலி ரசிகர்கள் தாங்கள் இசை கேட்பதற்கான அறையை விசேஷமாக வடிவமைத்துக் கொள்வதுண்டு.

இத்தகைய ஒலி ரசிகர்கள் பலர் சில தரமான ஒலிக்கருவிகளைத் தேடி நாடு விட்டு நாடு போவார்கள். நேர்த்தியான ஒலியில் இசை கேட்பதற்கான அவர்களது தேடலும் ஆர்வமும் அசாத்தியமானது. ஆனால் இவரில் சிலருக்கு இசை என்பதே பல்வேறு ஒலிக் கருவிகளை சோதித்து பார்ப்பதற்கான ஒரு சோதனைப் பொருள் மட்டும்தான். எப்படி ஒலி உபகரணங்களின் திறனை அதிகப்படுத்துவது என்ற சிந்தனையே அவர்களது பிரதான வேலை. ஆகவே அதன் இணைப்பில் புதிது புதிதாக ஏதாவது செய்து வித்தியாசத்தைப் பார்த்தபடியே இருப்பார்கள்.

தொடர்ந்து இசை கேட்பது ஒரு வாழ்க்கை முறையாக மாறிப்போன எனக்கும் சிறந்த ஒலியில் இசை கேட்பது என்பது மிக முக்கியமான ஒன்று. தேடி அலைந்து சேகரித்து வந்ததின் வழியாகவே இன்று தரமான ஒரு ஒலிக் கருவி வரிசையை நானும் வைத்திருக்கிறேன்  என்று சொல்லலாம். ஆனாலும் அதில் என் மனது முழுத் திருப்தி கொள்ளவில்லை. இருக்கிறதைவிடத் தரமானதாக இன்னொரு ஒலிக்கருவியை, இன்னொரு இணைப்பை மனம் தேடிக் கொண்டேயிருக்கிறது. சிறந்த இசைஒலிக்கான தேடுதல் என்பது முடிவற்றது. இது பல சமயம் நம்மை அலைக்கழிக்கத்தான் செய்யும். ஆனால் அலைக்கழிப்பதும் இசையின் தன்மைகளில் ஒன்றுதானே.

தமிழில்  : எஸ்.ராமகிருஷ்ணன். 
2008ல் எழுதியது