20130907

கண்ணாடியில் தெரியும் மனிதன் - மைக்கேல் ஜாக்ஸன்


கண்ணாடியில் தெரியும் மனிதன் (Man in the Mirror)
பாடியவர் : மைக்கேல் ஜாக்ஸன்
எழுதி இசையமைத்தவர்கள் : க்ளென் பல்லார்ட் (Glen Ballard), சியெதா காரெட் (Siedah Garret), மைக்கேல் ஜாக்ஸன்  
இசைத் தொகுப்பு : பேட் (Bad)
பாடல் வகைமை : பாப் (Pop) இப்பாடல் ஆர் அண்டு பி இசை, சோல் இசை, காஸ்பெல் இசை ஆகியவற்றின் கலவை.
ஆண்டு : 1988
மொழி : ஆங்கிலம்
நாடு : அமேரிக்க
தமிழில் : ஷாஜி

ஒரு மாற்றத்தை உருவாக்கப் போகிறேன்
எனது வாழ்நாளில் ஒரு முறையாவது
அருமையாக அதை நான் உணரப்போகிறேன்
வித்தியாசம் ஒன்றை உருவாக்கப் போகிறேன்
சிலவற்றை சரிசெய்யப் போகிறேன்

எனது குளிர்கால சொகுசுக் குப்பாயத்தின்
கழுத்துப் பட்டையை தூக்கி விடுகிறேன்
மனதில் காற்றொன்று வீசுகிறது
உணவற்று தவிக்கும் தெருக் குழந்தைகள் என் கண் முன்னால்
எதுவுமே பார்க்கவில்லை என்று கடந்து செல்ல
நான் என்ன கண்கள் தெரியாதவனா?

ஒரு கோடைக்காலத்தின் புறக்கணிப்பு
உடைந்துபோன ஒரு கண்ணாடிப் புட்டியின் மேல்த்துண்டு
ஒரு எளிய மனிதனின் உயிர்
இவை காற்றில் சுழன்று அலைகின்றன
இவற்றுக்கு மட்டும் போக இடமேதுமில்லை

எனது காண்ணாடியில் தெரியும் அந்த மனிதனிலிருந்து
நான் துவங்கப் போகிறேன்
உனது வழிகளை மற்றிக்கொள் என நான்
அவனிடம் சொல்லப்போகிறேன்
இதைவிட தெளிவான அறிவுரை எதுவுமில்லை
உலகை கொஞ்சமாவது உயர்ந்த இடமாக்க
உன்னையே உற்றுப்பார்
உன்னிடம் மாற்றத்தை உருவாக்கு

சுயநலம் மட்டுமே நிரம்பிய அன்பில் வாழ்ந்தவனே
ஒன்றை நீ அறியவேண்டிய காலம் வந்து விட்டது
தலையைச் சாய்க்கக் கூட இடமில்லாதவன்
ஒரு காசு கடன் கிடைக்கக் கூட வாய்ப்பில்லாதவன்
அது நீயே தான் என்று ஒரு கணம் எண்ணிப்பார்

ஆழ்ந்த ரணங்களில் வாழும் ஒரு விதவை
உடைந்து சிதிலமான ஓர் இதயம்
கரைந்துபோன எண்ணற்ற கனவுகள்
எல்லாம் ஒரு காற்றைப் போன்றவை தான்
போக இடமேதுமில்லாதவை

நான் என்னிடமிருந்து துவங்குகிறேன்
எனது காண்ணாடியில் தெரியும் மனிதனிலிருந்து துவங்குகிறேன்
உனது வழிகளை மற்றிக்கொள் என நான்
அவனிடம் சொல்கிறேன்
இதைவிட தெளிவான அறிவுரை எதுவுமில்லை
உலகை கொஞ்சமாவது உயர்ந்த இடமாக்க
உன்னையே உற்றுப்பார்
உன்னிடம் மாற்றத்தை உருவாக்கு

உன்னிடம் நேரமிருக்கும் இந்த கணத்திலேயே
இதை சரிவரப் புரிந்துகொள்
உன் இதயத்தை நீ மூடும்போது
உன் மனதையும் உன்னால் மூட முடியுமா?
அந்த மனிதன்..அந்த மனிதன்
கண்ணாடியில் தெரியும் அந்த மனிதன்
அவனிடம் நான் சொல்கிறேன்
உனது வழிகளை மற்றிக்கொள்
அது தான் உனக்கு நல்லது 
இதைவிட தெளிவான அறிவுரை எதுவுமில்லை
உலகை கொஞ்சமாவது உயர்ந்த இடமாக்க
உன்னையே உற்றுப்பார்
உன்னிடம் மாற்றத்தை உருவாக்கு
இப்போது.. இக்கணமே
அருமையான ஒரு உணர்வாக அதை நீ உணரப்போகிறாய்

உன்னைத் தூக்கியெடு
சில மாற்றங்களை உருவாக்கு
தடுக்க எதுவுமேயில்லை
கண்ணாடியில் வாழும் மனிதா
நீ அங்கிருந்து நகரவேண்டும்
நகர்.. நகர்... எழு... உன்னைத் தூக்கியெடு
நீ மட்டும்தான் அந்த மாற்றத்தை உருவாக்க முடியும்
அது உனக்கு தெரியும், உனக்கு தெரியும்
கண்ணாடியில் வாழும் மனிதா
நீ மட்டும் தான் அந்த மாற்றத்தை உருவாக்க முடியும்